Friday, February 21, 2014

செங்கற்சுவர்கள்.....


விரல்களில் அடிப்பட்டு வழியும் 
பிஞ்சு அடிமைகளின் குருதி 
கொண்டு சிவக்கிறது….!

விழி மூடிய முதலாளியின்
கனவில் குரூரமாய்
குதறிடும் நாய்கள்……!

பனைஓலையில் பாய்ந்தோடும் 
பல்லியை காட்டி 
விளையாடும் பிள்ளைகள் இருளில்…!

காய்ந்த தேங்காய் வட்டுக்களை
சுரண்டும் தாய்மை…!

காய்ந்து வற்றிய மார்பில் ஈரம்
தேடும் ஓர் உயிர்..!

கனத்த மழையில் பிசைந்த மண்ணும் 
பிரிந்துதான் போகிறது..!

பனை ஓலையில் சொட்டும் துளியின் 
ஒலியில் நாளை வேலைஇல்லை
என மகிழும் தாய்மை..!

மழையை சபித்தபடி 
விறைப்பாய் வெள்ளுடை அணிந்தவன்..! 


அடுக்கி வைத்த செங்கற்சுவர்கள் 
கலவைகளுக்கு இடையே 
வண்ணம் மாறித்தான் போனது..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Thursday, February 20, 2014

வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது..!!




தடங்கள் தட்டுப்படும்
தனை மறந்து சுயதழுவலில்
சில நேரங்களில்..!!


துணிவற்ற மனிதர்கள்
மனதை ஊன்றுகோலில்இருத்தி 
தெளிவாக இருப்பதாக சொல்லி
உலாத்திக்கொண்டிருக்கிறார்கள்..!!


ஓர் பொழுதில் உழன்றுவரும்
உணர்வுகள்
மெளன நதியாய்மெல்ல ஓடி
தின்று தீர்க்கும்வாழ்வின்
பொழுதுகளை


எண்ண அலைகளின் ஓட்டத்தில்
ஒத்து போகும் குரல்களில்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்...!!



வண்ணமயமாய் ..விழி தெளிக்கும் சாரலாய்..
தழுவும் தென்றலாய்..!!
வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது
அவரவர்களின் எண்ணச்சிதறல்களில்...!!

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்..

Wednesday, February 19, 2014

"நானிருக்கேன் உனக்காக"



ஓட ஓட விரட்டியது
பல பொழுதுகளில்
பட்டினி கிடக்கச்செய்தது..!!


முன்னும் பின்னுமாய்
மோதி உதைத்திருக்கிறது..!!


வெள்ளத்தில்
மூழ்கச்செய்திருக்கிறது..!!


தாங்கமுடியா துயரை
தந்து அடித்து
துவைத்திருக்கிறது..!!


ஏதும் எண்ணமுடியா
சிறு குழந்தையாய்
கட்டிப்போட்டிருக்கிறது..!!


எது எப்படியிருப்பினும்
எதிர்கொள்ளநம்பிக்கை
கைவிடவில்லை...
காத்திருக்கிறேன்....!!


"நானிருக்கேன் உனக்காக"
எனும்ஒற்றை வார்த்தைக்காய்..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Wednesday, February 12, 2014

புதியதாய்....












உதிரும் இலைகளை மறந்த
தளிர்க்கும் மரங்கள்….
புதியதாய் உற்சாகத்தில்..!!

வெறுக்கும் விடியலை மறந்த
 நிலவும் புதியதாய்.. 
ஒவ்வொரு நாளிலும்..!!

காற்றில் வீசியெறியப்பட்டு
மரம் மறந்த விதைகள் ..
புதுவிடியலை நோக்கி..!!

வண்டு துளைத்த பொந்துகளில் 
தனை மறந்த காற்றும் …
புது ராகம் இசைக்க..!!

பருவத்தில் பொழியும் மழையும்
தனை மறந்து புது உற்சகத்தோடு..
உயிர்களை உயிர்பிக்க..!!

காத்திருக்கிறேன் எனை மறந்த..
உன்னை எதிர்க்கொண்டு..
புதியதாய் பூபாளம் இசைக்க..!! 


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்..

Tuesday, February 11, 2014

மங்கியதோர் மாலைப்பொழுதினில்...!!




மண்ணிலே வெண்நிலவு

அவளைபார்த்த விழிகளில்

வேறு ஏதும் தெரியவில்லை


ஏட்டிலே ஏதும் புரியவில்லை

ஏனிப்படி என ஏங்கியே தவித்தது 

தயங்கியே நின்றது மனது


உயிர்கொடுத்தாள் என் விழிகளுக்கு

அவளையே சிறைக்கொண்டேன் என்னுள்


ஏகாந்த பொழுதுகளாய்  அவளை 

எண்ணிய நாட்கள்  கடந்து சென்றது

காணவில்லை அவளை


நேசம் தான் என்னுயிர் என்றவள்

சொற்களில் போதையேற்றி

என்நெஞ்சில் பாட்டெழுதியவள் 

மங்கிய மாலைபொழுதின் வேளையில்

மஞ்சள் மலர் சூட என்

மடி சாய வருவாளோ..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்..

Monday, February 10, 2014

சிறைப்படுவேன் உன்னுள்...


சிணுங்கும் 

செல்லக்கொஞ்சலில்

சிதறிடுவேன் ..!!

பார்க்காமல் பார்க்கும்

உன் விழியழகில் 

மயங்கிடுவேன்..!!


துளி பார்வை போதும்

துவளாமல் இடையணைப்பேன்..!!

துவண்டுவிழும் கூந்தலை

அள்ளி அணைத்து ரசித்திடுவேன்..!!

தனிமையில் பொங்கும்

நினைவுகளில் சுகப்படுவேன்..!!

என்னை சுற்றும் உயிராய்

நீ என்அருகினில் இருந்தால்

சிறைப்படுவேன் ..!!

உன் அழகினில் ..!!


கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

எதோ ஒன்றை சார்ந்தே அதன் ஈர்ப்பும்....





வாடிய பூக்களுக்காக

புன்னகைக்க மறப்பதில்லை..பூக்கள்..!!

உதிரும் இலைக்காக

துளிர்க்க மறுப்பதில்லை மரங்கள்..!!

விடியல் புறக்கணிக்கும் இரவை

அந்தி வரவேற்க மறக்கவில்லை..!!

சிலமணித்துளிகள் தழுவும் பனித்துளிகளை

இலைகள் வெறுக்கவில்லை..!!

இடைவெளியோடு கிடக்கும் நினைவுகள்

இயல்பை மீறுவதில்லை..!!

இயல்பை மீறும் பொழுதுகள் மகிழ்ச்சியால்

ததும்பி கிடக்கிறது..!!


கவிதையாக்கம்

**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

Thursday, February 6, 2014

அரும்பிய புன்னகை..


 




வழியிருந்தும் போக

மனமின்றி சிறைபட்டு

கிடக்கும் நெஞ்சத்தின்

நினைவு ..!!

தேங்கிய நதியில்

சிதறிய நினைவுத்துளிகள்

பாதை வகுத்தது

விழி வழியே ..!!!

வழிந்த நீரில்

சுவை தேடிய

செவ்விதழ்கள்

மலர்ந்தது ...!!

அரும்பியது புன்னகை..!!

நெருங்கியது நீ..!!



கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**


Wednesday, February 5, 2014

வார்த்தை தேடுகிறேன்....

Photo: இடைவெளி தீர வழி என்ன என்னவளே..!!
என் அன்பு மொத்தமும் முத்தமாய்
முதலீடு வைத்ததாலா??
விட்டில் பூச்சியானதம்மா மொத்த 
அன்பும்  முத்தமாய்
வினாடிகள் கூட எனக்கானதாக இல்லை
மொத்தமும் உனக்கானதாய் இருக்க
வார்த்தை தேடுகிறேன் உன்னிடம் 
என் மனம் சொல்ல ..!!!

கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**


இடைவெளி தீர வழி என்ன என்னவளே..!!

என் அன்பு மொத்தமும் முத்தமாய்


முதலீடு வைத்ததாலா??


விட்டில் பூச்சியானதம்மா மொத்த 


அன்பும் முத்தமாய்


வினாடிகள் கூட எனக்கானதாக இல்லை


மொத்தமும் உனக்கானதாய் இருக்க


வார்த்தை தேடுகிறேன் உன்னிடம் 


என் மனம் சொல்ல ..!!!

கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**

Tuesday, February 4, 2014

வாடைக்காற்று



சலசலக்கும் இலைகள் தழுவிய வாடைக்காற்று 

அதன் தழுவலில் தேன் துளியென விழித்த மனது

சுழன்ற அந்தஒரு பொழுதின்உன்னுடனான

நினைவுகுமிழ்கள் மூச்சுக்காற்றில் பயணிக்க

அதனுடன் இணைந்து நானும் பயணிக்கிறேன்

அரவமற்ற அமைதியான நறுமணம் சூழ

உன்னுடன் இணையும் அந்த தருணம்

நான் என்னையிழந்த தருணம்..!!

கன்னக்கதுப்பில் பனிக்காற்றின் குத்தலில்

குழம்பித்தான் போய்விட்டேன் நிஜமா ?

நினைவா?

 என்று புரண்டு படுக்கிறேன் வெற்றிடமாய் ..!!

வெப்பமாய் காற்று உள்ளேயும் வெளியேயுமாய்

விழித்து பார்க்கிறேன்….!! 


புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கிறாய்நீ .!!




கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ் 

Sunday, February 2, 2014

இது உனக்கானது…!!





தனிமையில் தாள் எடுத்தேன் என் காதல்

தனை உன்னில் எடுத்துரைக்க

இனிப்புச்சுவையில் திகட்டாத சுவையுமாய்

அமிழ்தமாய் எனதன்பில் கலந்து

கிடக்கும் என்னுடைய முகவரியே

என்னுயிரே..!!

முக்கனியே ..!!

முழுமதியே ..!!

உனை பற்றி எழுத

தென்றலினூடே தழுவி

தூண்டுகிறாய் என்னை..!

விண்மீனெல்லாம் கூடி ஒன்றாய்

மறைந்திருக்க

பூஞ்சோலையும் குயிலை உறங்கச்சொல்லி

காத்திருக்க

விடியும் வேளையும், நீல வானமும்

பசும் பட்டாடைஉடுத்திய நிலமும்

நான்  உனை  நினைத்து வடிக்கும் வார்க்கும்

வார்த்தைகளை பார்த்து அதிசயப்பட்டு போகிறது..!!

எனில் நகைக்கும் விழிமலருடையவளே

நீ மட்டும் தனிமையில் படித்துவிடு….!!

இது உனக்கானது…..!!


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**