Friday, October 19, 2012

காதல்.....மரத்திற்கும் .... மனம் ..............
உன் போர்வை குடைக்கு..
உள்ளே நான் வருடங்கள் ...பல

காத்திருந்தும் பல வசந்தங்கள்
வந்து வந்து போயிருந்தும் ...

எண்ணிலடங்கா காதல்கள்
கண்டிருந்தும் ...

உன்னை தேடி நான்
என்னை தேடி நீ
அலைந்திருந்தும்.....

இலையுதிர் காலத்தில்
மட்டுமே உன்னை
முழுமையாய் நான் காண

நமக்குள்ளும் காதல் ...
நாட்கள் பல ஆயினும்
ஆணி வேராய்.....

இந்த மண்ணுக்குள்ளே
புதைந்து கிடக்கிறது..

Wednesday, October 17, 2012

சாலையோரத்தில் ................வாழ்வியல் இன்று
சாலையோரத்தில்

வீதிதான் எனை
அணைத்தது ...விதிதான்
வாழ்வை தந்தது..

வாழ்வு பொய்த்து
போனது ..நீ
இல்லாமல் ...

இறந்தும் என்னருகில் நீ
இருந்தும் தொலைவில்
என் பிள்ளைகள்...

என்னை தொலைத்த
சந்தோசத்தில்....
இருந்தும்
உங்களை வாழ்த்த
மட்டுமே செய்கிறேன் ..

பொட்டில்லை
பூவில்லை
கையணி இல்லை
காதணி இல்லை

சுருக்கு பை....
சில்லறையோடு வயிற்றின்
இறுக்கத்தில்.....
ஆனாலும் இந்த வயிற்று
பாட்டிற்கு

சாலையோரத்தில்
வண்ணங்கள் நிறைந்த
பூக்களோடு நான் ...
வண்ணமில்லா
வாழ்வை எதிர்கொள்ள ..

"மதுரை "
வெகுநாட்கள் கழித்து அன்றுதான் நிம்மதியான உறக்கம் எனக்கு .. அதைக் கெடுத்த சத்தம் கேட்டு விழித்தேன்.. தாரணி! என் தங்கை..ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

நீளமான தலைமுடியை படிய வாரி அழகாய் ஒருசிறு ஒற்றைரோஜாவைக் காதோரம் செருகியபடி .. “ ண்ணா இப்ப ஓகே வா, ஒகே வா…” என்று கேட்டு கொண்டே இருந்தவளைப் பார்த்து.. “ம்.. நல்லா இருக்கும்மா..கிளம்பிட்டியா கொஞ்சம் இரேன் நானும் வரேன்..” என்று சொல்லிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து கிளம்ப ஆரம்பித்தேன்.

"ம்...கலையான முகம் தான் உனக்கு...நல்ல உயரம் தான் நீ..’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டு தலையை வாரி, அப்படியும் இப்படியும் கண்ணாடியில் பார்த்து கொண்டே சட்டையை இன் செய்து கிளம்பினேன்.

" டேய்...மதுரை.. போதும் டா உன் அலங்காரம்! யாரவது கண்ணு வைக்க போறாங்க’ என்று முகமெல்லாம் சிரிப்பாக, கைகளால் திருஷ்டி கழித்தாள் அம்மா!
“வைக்கட்டும்…வைக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை எடுத்து தங்கையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஏரிக்கரையின் எதிர் காற்றில் வேகமாகப் பறந்தேன்!

“ஏன் தாரு! உன்னோட அந்த ஃப்ரெண்ட்,அதான்,அந்த சுந்தரி இன்னும் இங்கதான் இருக்காளா” என்று பட்டும் படாமலும் கேட்டேன். “இல்லண்ணா” என்ற தாருவின் ஒற்றைச்சொல் பதில் எனக்குள் ஏனோ அதிக ஏமாற்றமே தந்தது.
பேருந்து நிறுத்தத்தில் தாருவை இறக்கிவிட்டு தயாராய் இருந்தக் கல்லூரிப் பேருந்தில் ஏறியதும்
அவளது கையசைப்புக்கு தலையாட்டிவிட்டு, சைக்கிளை பக்கத்திலிருந்த வீட்டின் ஓரம் நிறுத்தி வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு வணக்கம் சொல்லி, சுந்தரியைப் பற்றிய எண்ண அலைகளை மனதுக்குள் ஓடவிட அதேநேரம் என்னுடைய பேருந்தும்
வர, தாவி ஏறியதும் “மனிதன் மாறவில்லை….
..ஓஹொஹோ…ஹோஹஹோ” என்று பலமாய் பாடல் ஒலித்தது...பிடிக்கிறதோ பிடிக்கலையோ கேட்டே ஆகவேண்டும்!

அந்த பாட்டுச் சத்தத்தையும் மீறிய ஒரு சிரிப்பு என் காதினில் ஒலிக்க, மெல்ல அது வந்த திசை நோக்கிப் பார்த்தபோது, கலர் கலராய் தாவணிகள்! அந்த கலைக் கல்லூரியின் மாணவிகள் !

“ஏய்! மலர்.. சும்மாயிரு.. போதும் டி சிரிச்சது ..பல்லு கில்லு சுளிக்கிகப்போவுது....” என்ற ஒரு கண்டிப்புக் குரல் ...அதையும் மீறி அவள் கலகலவென சிரித்தாள். அடுத்த நிறுத்தத்தில் அந்த மலரும் அவளின் தோழியும் இறங்கிச் சென்றனர்.

"நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா" என்ற வரிகளுடன் பேருந்து கிளம்பியது.. ‘என்னது இது, இதுவரையில் ஒலித்தபாடல் ஏதும் ஏன் என்காதில் கேட்காமல்போனது’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நேற்றே வந்து மருத்துவமனை இருக்கும் இடம் தெரிந்து கொண்டதால் இன்று வசதியாக இருந்தது எனக்கு , அடுத்த நிறுத்தம் நான் இறங்கவேண்டியது. கண் மருத்துவமனையின் ஸ்பெஷல் நிறுத்தம் அது. அதற்கு முன்னரே எழுந்து படிக்கட்டை அடைந்தேன்.
பேருந்தின் வேகத்தில் என்னை தீண்டிய காற்றை ரசித்து கொண்டிருக்கையிலேயே இறங்குமிடம் வர காற்றின் சுகம் தடைபட்ட வருத்தம் வந்தது!

வேறிடத்திலிருந்து மாற்றலாகி வந்த எனக்கு அன்றுதான் முதல்நாள்."சுந்தரி நீயும்
சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோனம்…ஓஹோ…ஹோஹோ..” என்னைக் கேட்காமலே உள் மனம் பாட்டுபாடியது!

பூத்துக்குலுங்கிய மரங்களுக்கிடையே... இதமானதொரு காலை வெய்யிலில் 5 நிமிடம் நடந்ததும் எங்கள் மருத்துவமனை!

உள்ளே நுழையும்போதே "அஞ்சு வரேன்னாளே..இன்னும் காணலையே..
எப்படி போறது .. இந்த கண்ணு வேற கூசித்தொலையுதே.. என்ற வயதான அம்மாவின் குரல் காதுகளில் ஒலிக்க, தயங்கி நின்ற என்னை, “தம்பி..கொஞ்சம் அந்த வாசல்வரை கூட்டிட்டு போய் விடுங்களேன்” என்றபோது, "ஒரு நிமிஷம் பாட்டி.. இங்கேயே இருங்கள் தோ வரேன்” ன்னு சொல்லி வேகமாய் உள்ளே சென்று கைவிரல் பதிந்து ....நேரம் பதிந்து வேகமாய் வந்தபோது, பாட்டி அங்கயே நின்று கொண்டிருந்தார்.

அவரது கையைப் பற்றி நடந்துகொண்டே “யாரும் கூட வரலியா பாட்டி ஏன் தனியா வந்தீங்க” என்று கேட்க
“என் பேத்தி வரேன்னு சொல்லிருந்தா தம்பி ஆனா காணலை அவ வந்தா பத்திரமாக அழைச்சுட்டு போவா ..ஏன் வரலைன்னு தெரிலியே” என்றார்.

“சரி! நீங்க எங்கே போகணும்?” ன்னு கேட்டதை காதில் வாங்கிகொள்ளாது தன் பேத்தி வராததையே சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் பாட்டி .

பேருந்து நிறுத்தம் வரை போய், “பாட்டி நீங்க எங்கே போகணும்” னு சொல்லுங்க” என நான் கேட்டுக்கொண்டே அருகிலிருக்கும் டீக்கடை பெஞ்சில் உட்காரவைக்க,
கையை வேகமாய் உதறி மெளனமாய் உட்கார்ந்த பாட்டியை அதிசயமாய் பார்த்தேன்.

‘பாட்டி ஏனிப்படி நடந்துகிறாங்க! வந்த முதல்நாளே இப்படியா! என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை!’ என்று நொந்துகொண்டே டீகடைக்காரிடம் “அண்ணே, இந்த பாட்டிகூட யாரவது வந்ததைப் பார்த்தீங்களா நீங்க” என்றேன்.அவர் “யாரைச் சொல்றீங்க தம்பி” என்றதும், திரும்பிப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தால்..
யாருமில்லை அங்கு பெஞ்ச் காலியாக இருந்தது !!
படபடப்புடன் சாலையை நோக்க சாலையை நோக்க வெளிச்சம் கண்ணை கூசியது ………..

விதியத்து............உன்னை தேடி ஓடி ஓடி ...
வாடி வதங்கிய கால்கள் ...
உன்னை காணாமல் ...
உன்னை சுமந்த
என் வயிறு...வதங்கி போய்
உணவு உண்ணாமல்
சுருங்கி கிடக்க ....

உன்னை காண என்
விழிகள் ஏங்கி, வைத்த
விழி மாறாமல் வழி பார்த்து
ஏங்கி கிடக்க ..

வருவோரை ..
போவோரை ....
பார்த்து கண் பூத்து போய் ..

இதோ வருகிறேன் என்று
நீ விட்டு சென்ற
இடத்திலே நான் ...
விதியத்து..

துயரம் ...
என் முகம் முழுதும்
ஓடும் சாலைகள்
நீ வருவாய் என
காத்திருக்கிறது ..

என் தலை முழுதும்
முடிகள்..ஆனாலும்
உன் சிந்தனைகளால்
நரைத்து போய்...

என் விரல்களில் நீ
அணிவித்த மோதிரம்
இளமையாய் ...
இருக்கமாய் இன்னும் ..

உனக்கு பிடித்த என்
மூக்குத்தி
எனக்குள்ளே
பொதிந்து போய்...

என் விழி முழுதும்
உன்னை தொலைத்த
துயரம்

Monday, October 1, 2012

"அப்பா" எனும் மானுடம்!


ஜானு………என் ஜானு…...கடலைப்பார்த்ததும் அவளின் நினைவு தான் எனக்கு.

மாலை மயங்கும் நேரம் பேத்திகள்மீனுவும் வீணாவும், என் கையை பிடித்து கொண்டே
ஆடி ஓடி வந்தனர் ."தாத்தா கொஞ்சம் அலையில கால் வைக்கிறோம் , அம்மா கிட்ட சொல்லாதீங்க" என்று சொல்லிட்டு வேகமாக ஓடி... கடல் அலையில் விழுந்து புரண்டனர் .எனதுநினைவுகள் ஜானுவை நோக்கி செல்ல .. நேரம் போனதே தெரியவில்லை சட்டென்று வீணு முகத்தில் அடித்த தண்ணீர் என்னை நினைவுக்கு கொண்டுவர .."என்னம்மா போகலாமா" எனக் கேட்க .."இல்லை தாத்தா இன்னும கொஞ்சம் நேரம்"என்று சொல்லி பட்டம் வாங்க ஓடினாள்.

கூட்டம் அதிகமில்லை என்றாலும் வந்தவர்கள் அனைவரும்தத்தம் குடும்பத்தினரோடு எல்லோர் கையிலும் பட்டம் ,அதைக் கடற்காற்றில் அலைய விட்டு விளையாடி கொண்டிருந்தனர். அலைகளின் சீற்றம் அதிகமாகி கொண்டே இருந்தது அலைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததில் இருட்டவும் ஆரம்பித்திருந்தது..மருமகள் ஏதும் சொல்லிவிடுவாளோ எனும் யோசனையோடு திரும்பிப்பார்த்தேன். அவர்கள்விளையாட்டு முடிவதாய் தெரியவில்லை ..

"நேரமாகிறது கண்ணுங்களா ,வாங்க வீட்டிற்கு போகலாம்"னு சொல்லி கொண்டே அவர்களின் அருகாமையில் சென்றேன் ..பட்டத்தை விட்டு விட்டு ,பந்து தட்டி விளையாடி கொண்டிருந்தார்கள் ..அவர்களின் கைப்பிடித்திழுக்க "இருங்க தாத்தா வருகிறோம்" என்று சொல்லிவிட்டு ,கொஞ்சம் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியிடம் பந்தை கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வந்தார்கள் ..என் கைபிடித்து ஆடிக்கொண்டே வந்தார்கள் சாலை முழுதும் ,"தாத்தா வேகமாக வாங்க ,வாங்க" என சொல்லி கொண்டே மீனு ஓடினாள்,வீணா என் கைபிடித்து வந்தாள் மெதுவாக ..அழகான சாலை இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்த அந்த புற நகரில் கடற்கரைக்கு எதிரேயுள்ள அழகான வீடு என் மகனுடையது .

வீட்டினுள் நுழையும் போதே மருமகள்மலர் "கைகால்களைக் கழுவிவிட்டு உள்ளே வாருங்கள் " என்று முணுமுணுத்துகொண்டே போனாள் ..பிள்ளைகளை இழுத்து கொண்டே, "படிக்கவேண்டாமா? நேரத்துடன் வருவதில்லையா, இருங்கள் அப்பா வரட்டும்.. சொல்கிறேன் என்று கோபமாய் கத்திக்கொண்டே குழந்தைகளை அடித்தாள். அழுது கொண்டே அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர் . நேராக பூஜை அறை சென்று வணங்கி விட்டு புத்தக பைகளுடன் மாடிக்கு சென்றனர்.. அடித்து கொண்டிருந்த தொலை பேசியை எடுத்து "ம்.சொல்லுங்க" என்று குரல் குழைவானதில் எதிர்புரத்தில் பேசுவது என்மகன் என்பது தெரிந்தது .

எழுந்து வெளியே சென்று அமர்ந்தேன் . அந்த இருட்டினில் குளிர் காற்றினில் அலைகளின் மொழி எனக்குள் பேசியது.. ஒருமுறையாவது கடலை பார்க்க வேண்டும்.அலையினில் கால் நனைக்க வேண்டும் என்ற அவளின் ஆசையைநிறைவேற்றவே இல்லை நான். ஜானு.. ஜானு ..என்னை தேடி வந்தவள்..
எனக்காகவே வாழ்ந்தவள் ,எனை ஒரு துளி நேரமேனும் பிரியாதவள் .அப்படியே எழுந்து வாசல் கதவின் அருகே நின்று அலையின் சத்தத்தை
ரசிக்க என் காதில்"என்னை விட்டு ஓடி போக முடியுமா ,நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ".என என் ஜானு பாடும் குரல் காதில் ஒலித்தது...
அவளின் நினைவுகளோடு அப்படியே கடலை நோக்கி நடந்தேன்..

என் மகன் மோகன்பிறந்த முதல் பிரசவத்திலேயே தன்நினைவற்றுப்போக அன்றிலிருந்து எனக்கு அவளே முதல் குழந்தையானாள் ..நினைக்க நினைக்க கடல்அலை போல அவளின் நினைவுகள் என் நெஞ்சில் அல்லாடியது ..என்ன மாயம் செய்தாளோ... என் வாழ்வில்... ஓடி விட்ட எங்கள் 46 ஆண்டுகால வாழ்கையைத் திரும்பி பார்க்கையில்... மோகன் வளர்ந்து காதல் திருமணம் செய்து ..அப்பப்பா ஆண்டுகள் ஓடியும் அவளின் மரணத்தன்று மட்டுமே எனை வந்து பார்க்க முடிந்தது அவனால் ..பதினாறாம் நாள் காரியம் முடித்து என்னை அவனோடு அழைத்து வந்து விட்டான் ... அன்றிலிருந்து அவனுக்கு பிரச்சனைகள் தான்.

அழகான நிலவொளியில் கடற்கரை மணலில் அப்படியே சாய்ந்தேன்..கண்களை மூட அருகினில் என் ஜானு..பாடுங்களேன் ன்னு கேட்க "சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி .............."

கதிரவனின் ஒளி அழுத்தம் இல்லாமல் ஒளிர , மெல்ல வெளியே வந்தாள் மலர்.... தேனீர் கோப்பையுடன்,'என்ன சொல்வேன் இவரிடம்' என்று யோசித்து கொண்டே நடந்துகொண்டிருந்தாள் .சத்தமில்லாமல் வாசலில் கார் வந்து நின்று மோகன் இறங்கியதும் "அப்பா வந்துட்டாங்க" என்று சத்தமிட்டபடி குழந்தைகள் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டார்கள் .

மலர் எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தாள் . "அப்பா... அப்பா..."என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த மோகன், வீடு) நிசப்தமாயிருக்க "அப்பா எங்கே?" என்ற கேள்விக்கு அவனின் முகத்தைப்பார்ப்பதை தவிர்த்தபடியே "உங்க கிட்ட பேசும்போது இங்கேதாங்க இருந்தார்... அப்புரம் எங்க போனார் ன்னு தெரியலையே" என்றவள் கூற.. "என்ன சொல்ற... காணோம்னா... எனக்கு சொல்லியிருக்கலாம் இல்ல...அய்யோ அவருக்குஇங்கு யாரையுமே தெரியாதே, கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே இல்லையே ,அங்கேயிருந்தால் அம்மா நினைவில் பாதிக்கப்படுவார் ன்னு நான் தானே அழைத்து வந்தேன்... இப்ப..எங்க போனாங்களோ..என்ன ஆச்சோன்னு தெரியலையே" என்று அரற்றிக் கொண்டிருந்தபோது வேலையாள் ரங்கன் பதட்டமாய் ஓடி வந்து.."அய்யா... அய்யா.." வார்த்தைகள் தடுமாறி வாய் குளரி வந்த திசையில் கைகாட்ட.... வேகமாக ஓடிய மோகன் கூடிநின்ற கூட்டத்தை தள்ளிவிட்டு பார்த்தபோது மணலில் "ஜானு" என்றெழுதியநிலையில் அவனது அப்பா தலைசாய்ந்தபடி கிடந்தார்.

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......பகுதி - 3

வேகமாக வந்தவன் எங்களை கடந்து ரயில் நிலையத்திற்குள்

சென்றான்...ரயில் பாதை கடந்து சென்றோம்.வேர்க்கடலை

விற்பவர் எங்களை நோக்கி வந்து

கேட்கும் முன்பே கொடுத்து விட்டார்..இரண்டு பொட்டலத்தை,

வாங்கி கொண்டு நேரத்தை பார்த்து கொண்டே நிலையத்தின்

நடுவிற்கு வந்து காத்திருந்தோம் "செங்கல்பட்டு ரயிலுக்காக "

அந்த புல்லெட்காரன் என் தோழியிடம் வந்து ஒரு சிறு பேப்பரை

கொடுத்து விட்டுசென்று விட்டான் ..அது ஒரு தொலை பேசி எண்,

சுந்தரி எதற்கடி என்னிடம் தந்தான் ..

புரியவில்லையே..என கேட்டு கொண்டே இருந்தாள்,என்னிடம்

தந்து விட்டாள் அந்த சீட்டை ...

ரயில் வந்ததும் ஏறிக்கொண்டோம் எங்களின் விருப்பமான பெட்டியில் ...

எற்கனவே எங்களுக்கு அங்கு இருக்கை பிடிக்கப்பட்டு இருந்தது..

செங்கல்பட்டு ரயில் அதனால் ,இனி வரும் நிலையங்களில் கூட்டம்

அதிகமாகும்..

எங்கள் பெட்டியில் மட்டும் நாங்களும் எங்களை "சின்னப்புள்ளைங்க "

என்று கூறும்சில பெரிய அக்காக்களும்..

ஆரம்பித்தாள் எப்போதும் போல சுந்தரி பாடுவதை .பெரிய

அக்காக்கள் கேட்பதைத்தான் அவள் முதலில்

பாடவேண்டும்.அவங்க தானே எங்களுக்கு இருக்கை பிடித்து

கொண்டு வருகிறார்கள் ,

ஆனால் .இன்று நான் கேட்ட பாடல் "அடி ஆத்தாடி இள மனசொன்னு

ரெக்கை கட்டி பறக்குது சரிதானா ?

என்ற பாடல்..சுந்தரி என்னை ஒரு முறை தன் பார்வையால்

எனக்குள் தேடினாள்..

பாடு பாடு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு

ரசித்து கொண்டிருந்தேன் ..

அவள் பாடி முடிக்க முடிக்க மேலும் இன்னும் ஒரு முறை

என நாலு முறை அவளை பாட சொல்ல

"பக்கத்தில் அமர்ந்திருக்கும் "மாலை முரசு பத்திரிகையில் பணி

புரியும் தங்கம் அக்கா ..

என்னம்மா இந்த பாட்டு இப்படி ரசிக்கிற என கேட்க அப்போதுதான்

கண் விழித்தேன்...ஒண்ணுமில்ல அக்கா ,என சொல்லி

பார்க்க சுந்தரி ,இறங்க தயாரானாள் தாம்பரத்தில் ...

ரயில் நின்றதும் இறங்கி அவளை வழி அனுப்பி மீண்டும் ரயில்

உள்ளே நான் என்னுள்ளே அவனின் நினைவுகள்...

சுகமாக ஓடி கொண்டிருக்க "யம்மா வழி விடும்மா " என காட்டு

கத்தல் கத்தி கொண்டே அந்த கீரைக்காரி இறங்கினாள்.

அவளின் பிழைப்பே இந்த ரயில் தான் ...காலையில் அவளை பார்த்தால்

மங்களகரமாக அம்மன் போல இருப்பாள்..ஆனால் வாயிலிருந்து

வரும் அந்த புகையிலையின்

வாசம் குடலை புரட்டும்...ஆனால் நல்லவள் ,குடிகாரனுக்கு

பொண்டாட்டி.பிள்ளைகளை

படிக்க வைக்கணும் என்பதற்காகவே நாளெல்லாம் உழைப்பவள் ....

அவளுக்கு நான் என்றால் இஷ்டம் ..

நானும் இறங்கினேன் ..என்னோட அண்ணா எனக்காக காத்திருந்தார்

ரயில் நிலைய வாசலில் ...வேகமாக நடந்து

அண்ணாவின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன் ..அண்ணா எது பேசாமல்

மிதிக்க ஆரம்பித்தார் சைக்கிளின் வேகம் கூடியது

என்னோட நினைவுகளும் வேகமாக ஓடிகொண்டிருந்தது..எதிர்காற்றில்

வேகத்தை கூடி அண்ணா செல்ல ..அண்ணா கொஞ்சம் நிறுத்து அண்ணா

என சொல்லி கீழிறங்கினேன் வீடு வரை தள்ளி கொண்டே போகலாம்

என சொல்லி நடக்க ஆரம்பித்தோம்..அண்ணா பேசாமல் நடந்தார் ..

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அண்ணா எனை பார்த்து யாருக்காவது

நம்ம வீட்டு விலாசம் கொடுத்தியா மா .

இல்லையே அண்ணா ..அப்பாவுக்கு நண்பர்களை வீடு வரை கொண்டு

வருவது இஷ்டமில்லாத விஷயம் ,

அதிலும் உன் பெயர் போட்டு வாழ்த்து அட்டை வந்திருக்கு

என சொல்ல ,அதிர்ந்தேன் நான் ..

பயம் கூடியது யாராக இருக்கும் யாருக்கும் தரவில்லையே நான்..

அப்பா என்ன சொல்ல போகிறாரோ,என பயந்துகொண்டே நடந்தேன் .

அந்த எதிர்காற்றிலும் வேர்க்க ஆரம்பித்தது எனக்கு ...

வீடு நெருங்க நெருங்க வெலவெலத்து போனேன் நான்

வாழாவெட்டி................


உன் பார்வை உன் வாசம்
என்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது .
நான் நடக்கையிலும் என்னை சுற்றியே
என்னுடனே வீதிதோறும் வலம் வருகின்றது.

என்னை முழுமையாக
ஆக்கிரமித்து கொண்டிருகிறது .
நீ இல்லாத நேரங்களிலும் ..
என்னிடத்தில் மிக நெருக்கமாக அளவலாவுகின்றது .

நித்தம் நான் செய்யும்வேலைகள் அனைத்திலும்
என்னுடனே உலாவுகின்றது..
கோவத்திலும் சோகத்திலும் என் உள்ளே
சென்று என்னை அமைதியாக்குகிறது.

வாழாவெட்டியாக\" இருந்தாலும்
வாழ்ந்த காலங்களின் வாசம்-உன்
வாசம் மட்டுமே எனக்கு
புது தெம்பை தருகின்றது ..

உன் வாசம் என் வாழ்விருள்
போக்கி ஒளி தருகின்றது.
குத்தல் பேச்சுகள் நிறைந்த
இடங்களில் நீ என்னுடனே
என்னை அணைத்து உன் வாசத்திற்குள்
கூட்டி செல்கிறாய் ..

எப்போதுமே என்னருகினில் எனை சுற்றியே
நிறைந்திருப்பதால் ...உன்னை சுற்றியே
நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..
வாழும் நாட்களில் உன் வாசத்தில்
கரைகிறேன் ..