Friday, June 6, 2014

ஒரு மதியபொழுதினில்.....







முற்றத்து நடுவினில் ஓயாமல்
சத்தமிட்டபடி தானியத்தை கொத்தித்தின்றன
குருவிகளும் காக்கைகளும் புறாக்களும்
ஒரு மதியபொழுதினில்

இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்
இறக்கை அடிப்பிலே தெரிந்தது  அதில்
ஒற்றை புறா ஒன்று உணவை  விழுங்கி
ஊட்டிக்கொண்டிருந்தது பிள்ளைக்கு

அடுக்களையில் புகை சூழ் நடுவே
கற்றையாய் விழும் கூந்தலை
அள்ளி முடிக்க வியர்வை மழையால்
குளித்து போயிருந்தன அவள் விழிகளும்

சைக்கிளின் மணிச்சத்தத்தில் படபடவென
பறந்த பறவைகள் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது
கிடுகிடுவென்று வாசல் போனது மனம்

நீள்வாசலின் நேரேதிரே மாட்டியிருந்த
அலமாரி கண்ணாடி கூறியது அவள்
நெற்றி பொட்டிழந்தக்கதையை ..அவன்
நினைவுக்குழந்தையாய் கரம் பற்றி அணைத்திருந்தான்

அழவுமில்லை மீண்டும் பொட்டிட துணிவுமில்லை
பறவைகளினூடே ரெக்கைகட்டிபறந்தமனம் சிலாகித்தது ..!!
நெல் மணிகளை சிதறிக்கொண்டிருந்தது
கைவிரல்கள்..!
கவிதையாக்கம்

**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**

புரிதலற்று காத்திருக்கிறது காதல்


 

சங்கமிக்கும் எண்ணங்கள் மனதினில் ஓராயிரம் ,
வலிகள், அதில் எழும்புகிறதுதுடித்தெழுந்து
ஆர்பரிக்கும் விழிகள் நிரம்புகிறது குளமாய்
வழிந்தோடும் வேதனைகளின் சூட்டில் அனைத்தும்
தொலைந்து போகிறது.
தனிமையில் சுட்டெரிக்கும் சூரியானாய்
உதிக்கும் நினைவுகள் எனக்கும் மட்டும்தானா?
பொய்சொற்களை புகலும் உன் எண்ணத்திலும்
வடிகிறது வியர்வை துளிகள் ! அட ஆமாம்..!
நீ பொய்தான் புகன்றிருக்கிறாய்..!
பாசமதன் மீது வேஷம் கட்டிய கட்டியக்காரனாய்,
மேடை நாடகம் நிகழ்த்துகிறாய்…
இடைவெளி விட்டு கூவிக்கொண்டே வரும்
நாகரீக கோமாளியாக்குகிறாய் என்னை…
இதயத்தில் எழுதிய பெயரை திரையிட்டு
மறைக்கிறது.. உன் மெளனப்பூச்சு பூசிய இதழ்..!
எங்கோ என்றோ விட்டு சென்ற உணர்வை ,
தொட்டு தொடரும் எழுத்துக்களாய் என்னில்
எழுதிவிட்டு ஏக்கங்களை சுமக்க வைத்து
காத்திருக்கும் மயானமாய் ஆக்கிவிட்டாய்..!
கொட்டு மேளத்தையும் வாசனை திரவியத்தையும்
எதிர்கொண்டு காத்திருக்கிறேன்… அது
எந்த மாலை பெற ஏன்று அறியாதவளாய்,
எதுவும் நடக்கட்டும் என பூவிழி கரைய,
புரிதலற்று காத்திருக்கிறது காதல் கொண்ட மனது..!