Monday, October 1, 2012

"அப்பா" எனும் மானுடம்!






ஜானு………என் ஜானு…...கடலைப்பார்த்ததும் அவளின் நினைவு தான் எனக்கு.

மாலை மயங்கும் நேரம் பேத்திகள்மீனுவும் வீணாவும், என் கையை பிடித்து கொண்டே
ஆடி ஓடி வந்தனர் ."தாத்தா கொஞ்சம் அலையில கால் வைக்கிறோம் , அம்மா கிட்ட சொல்லாதீங்க" என்று சொல்லிட்டு வேகமாக ஓடி... கடல் அலையில் விழுந்து புரண்டனர் .எனதுநினைவுகள் ஜானுவை நோக்கி செல்ல .. நேரம் போனதே தெரியவில்லை சட்டென்று வீணு முகத்தில் அடித்த தண்ணீர் என்னை நினைவுக்கு கொண்டுவர .."என்னம்மா போகலாமா" எனக் கேட்க .."இல்லை தாத்தா இன்னும கொஞ்சம் நேரம்"என்று சொல்லி பட்டம் வாங்க ஓடினாள்.

கூட்டம் அதிகமில்லை என்றாலும் வந்தவர்கள் அனைவரும்தத்தம் குடும்பத்தினரோடு எல்லோர் கையிலும் பட்டம் ,அதைக் கடற்காற்றில் அலைய விட்டு விளையாடி கொண்டிருந்தனர். அலைகளின் சீற்றம் அதிகமாகி கொண்டே இருந்தது அலைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததில் இருட்டவும் ஆரம்பித்திருந்தது..மருமகள் ஏதும் சொல்லிவிடுவாளோ எனும் யோசனையோடு திரும்பிப்பார்த்தேன். அவர்கள்விளையாட்டு முடிவதாய் தெரியவில்லை ..

"நேரமாகிறது கண்ணுங்களா ,வாங்க வீட்டிற்கு போகலாம்"னு சொல்லி கொண்டே அவர்களின் அருகாமையில் சென்றேன் ..பட்டத்தை விட்டு விட்டு ,பந்து தட்டி விளையாடி கொண்டிருந்தார்கள் ..அவர்களின் கைப்பிடித்திழுக்க "இருங்க தாத்தா வருகிறோம்" என்று சொல்லிவிட்டு ,கொஞ்சம் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியிடம் பந்தை கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வந்தார்கள் ..என் கைபிடித்து ஆடிக்கொண்டே வந்தார்கள் சாலை முழுதும் ,"தாத்தா வேகமாக வாங்க ,வாங்க" என சொல்லி கொண்டே மீனு ஓடினாள்,வீணா என் கைபிடித்து வந்தாள் மெதுவாக ..அழகான சாலை இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்த அந்த புற நகரில் கடற்கரைக்கு எதிரேயுள்ள அழகான வீடு என் மகனுடையது .

வீட்டினுள் நுழையும் போதே மருமகள்மலர் "கைகால்களைக் கழுவிவிட்டு உள்ளே வாருங்கள் " என்று முணுமுணுத்துகொண்டே போனாள் ..பிள்ளைகளை இழுத்து கொண்டே, "படிக்கவேண்டாமா? நேரத்துடன் வருவதில்லையா, இருங்கள் அப்பா வரட்டும்.. சொல்கிறேன் என்று கோபமாய் கத்திக்கொண்டே குழந்தைகளை அடித்தாள். அழுது கொண்டே அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர் . நேராக பூஜை அறை சென்று வணங்கி விட்டு புத்தக பைகளுடன் மாடிக்கு சென்றனர்.. அடித்து கொண்டிருந்த தொலை பேசியை எடுத்து "ம்.சொல்லுங்க" என்று குரல் குழைவானதில் எதிர்புரத்தில் பேசுவது என்மகன் என்பது தெரிந்தது .

எழுந்து வெளியே சென்று அமர்ந்தேன் . அந்த இருட்டினில் குளிர் காற்றினில் அலைகளின் மொழி எனக்குள் பேசியது.. ஒருமுறையாவது கடலை பார்க்க வேண்டும்.அலையினில் கால் நனைக்க வேண்டும் என்ற அவளின் ஆசையைநிறைவேற்றவே இல்லை நான். ஜானு.. ஜானு ..என்னை தேடி வந்தவள்..
எனக்காகவே வாழ்ந்தவள் ,எனை ஒரு துளி நேரமேனும் பிரியாதவள் .அப்படியே எழுந்து வாசல் கதவின் அருகே நின்று அலையின் சத்தத்தை
ரசிக்க என் காதில்"என்னை விட்டு ஓடி போக முடியுமா ,நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ".என என் ஜானு பாடும் குரல் காதில் ஒலித்தது...
அவளின் நினைவுகளோடு அப்படியே கடலை நோக்கி நடந்தேன்..

என் மகன் மோகன்பிறந்த முதல் பிரசவத்திலேயே தன்நினைவற்றுப்போக அன்றிலிருந்து எனக்கு அவளே முதல் குழந்தையானாள் ..நினைக்க நினைக்க கடல்அலை போல அவளின் நினைவுகள் என் நெஞ்சில் அல்லாடியது ..என்ன மாயம் செய்தாளோ... என் வாழ்வில்... ஓடி விட்ட எங்கள் 46 ஆண்டுகால வாழ்கையைத் திரும்பி பார்க்கையில்... மோகன் வளர்ந்து காதல் திருமணம் செய்து ..அப்பப்பா ஆண்டுகள் ஓடியும் அவளின் மரணத்தன்று மட்டுமே எனை வந்து பார்க்க முடிந்தது அவனால் ..பதினாறாம் நாள் காரியம் முடித்து என்னை அவனோடு அழைத்து வந்து விட்டான் ... அன்றிலிருந்து அவனுக்கு பிரச்சனைகள் தான்.

அழகான நிலவொளியில் கடற்கரை மணலில் அப்படியே சாய்ந்தேன்..கண்களை மூட அருகினில் என் ஜானு..பாடுங்களேன் ன்னு கேட்க "சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி .............."

கதிரவனின் ஒளி அழுத்தம் இல்லாமல் ஒளிர , மெல்ல வெளியே வந்தாள் மலர்.... தேனீர் கோப்பையுடன்,'என்ன சொல்வேன் இவரிடம்' என்று யோசித்து கொண்டே நடந்துகொண்டிருந்தாள் .சத்தமில்லாமல் வாசலில் கார் வந்து நின்று மோகன் இறங்கியதும் "அப்பா வந்துட்டாங்க" என்று சத்தமிட்டபடி குழந்தைகள் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டார்கள் .

மலர் எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தாள் . "அப்பா... அப்பா..."என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த மோகன், வீடு) நிசப்தமாயிருக்க "அப்பா எங்கே?" என்ற கேள்விக்கு அவனின் முகத்தைப்பார்ப்பதை தவிர்த்தபடியே "உங்க கிட்ட பேசும்போது இங்கேதாங்க இருந்தார்... அப்புரம் எங்க போனார் ன்னு தெரியலையே" என்றவள் கூற.. "என்ன சொல்ற... காணோம்னா... எனக்கு சொல்லியிருக்கலாம் இல்ல...அய்யோ அவருக்குஇங்கு யாரையுமே தெரியாதே, கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே இல்லையே ,அங்கேயிருந்தால் அம்மா நினைவில் பாதிக்கப்படுவார் ன்னு நான் தானே அழைத்து வந்தேன்... இப்ப..எங்க போனாங்களோ..என்ன ஆச்சோன்னு தெரியலையே" என்று அரற்றிக் கொண்டிருந்தபோது வேலையாள் ரங்கன் பதட்டமாய் ஓடி வந்து.."அய்யா... அய்யா.." வார்த்தைகள் தடுமாறி வாய் குளரி வந்த திசையில் கைகாட்ட.... வேகமாக ஓடிய மோகன் கூடிநின்ற கூட்டத்தை தள்ளிவிட்டு பார்த்தபோது மணலில் "ஜானு" என்றெழுதியநிலையில் அவனது அப்பா தலைசாய்ந்தபடி கிடந்தார்.

3 comments:

  1. நல்ல லைன் தமிழ் -- ஒரு ஷார்ட் பிலிம் பண்ணலாம் ,..:)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமை.

    மனைவியை இழந்த கணவனின் மனநிலையையும் அவரது இறுதிநிலையையும் நன்றாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

    பெற்றபிள்ளையின் போக்கும்... வந்த மறுமகள் நடந்துகொள்ளும் விதமும்... காலத்தால் கூட மாற்றமுடியாதது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

    பாராட்டுக்கள் தமிழ்!

    சிறுகதை உலகத்திற்குத் தொடரட்டும் உங்களின் பங்களிப்பு!

    ReplyDelete