Monday, October 1, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......பகுதி - 3





வேகமாக வந்தவன் எங்களை கடந்து ரயில் நிலையத்திற்குள்

சென்றான்...ரயில் பாதை கடந்து சென்றோம்.வேர்க்கடலை

விற்பவர் எங்களை நோக்கி வந்து

கேட்கும் முன்பே கொடுத்து விட்டார்..இரண்டு பொட்டலத்தை,

வாங்கி கொண்டு நேரத்தை பார்த்து கொண்டே நிலையத்தின்

நடுவிற்கு வந்து காத்திருந்தோம் "செங்கல்பட்டு ரயிலுக்காக "

அந்த புல்லெட்காரன் என் தோழியிடம் வந்து ஒரு சிறு பேப்பரை

கொடுத்து விட்டுசென்று விட்டான் ..அது ஒரு தொலை பேசி எண்,

சுந்தரி எதற்கடி என்னிடம் தந்தான் ..

புரியவில்லையே..என கேட்டு கொண்டே இருந்தாள்,என்னிடம்

தந்து விட்டாள் அந்த சீட்டை ...

ரயில் வந்ததும் ஏறிக்கொண்டோம் எங்களின் விருப்பமான பெட்டியில் ...

எற்கனவே எங்களுக்கு அங்கு இருக்கை பிடிக்கப்பட்டு இருந்தது..

செங்கல்பட்டு ரயில் அதனால் ,இனி வரும் நிலையங்களில் கூட்டம்

அதிகமாகும்..

எங்கள் பெட்டியில் மட்டும் நாங்களும் எங்களை "சின்னப்புள்ளைங்க "

என்று கூறும்சில பெரிய அக்காக்களும்..

ஆரம்பித்தாள் எப்போதும் போல சுந்தரி பாடுவதை .பெரிய

அக்காக்கள் கேட்பதைத்தான் அவள் முதலில்

பாடவேண்டும்.அவங்க தானே எங்களுக்கு இருக்கை பிடித்து

கொண்டு வருகிறார்கள் ,

ஆனால் .இன்று நான் கேட்ட பாடல் "அடி ஆத்தாடி இள மனசொன்னு

ரெக்கை கட்டி பறக்குது சரிதானா ?

என்ற பாடல்..சுந்தரி என்னை ஒரு முறை தன் பார்வையால்

எனக்குள் தேடினாள்..

பாடு பாடு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு

ரசித்து கொண்டிருந்தேன் ..

அவள் பாடி முடிக்க முடிக்க மேலும் இன்னும் ஒரு முறை

என நாலு முறை அவளை பாட சொல்ல

"பக்கத்தில் அமர்ந்திருக்கும் "மாலை முரசு பத்திரிகையில் பணி

புரியும் தங்கம் அக்கா ..

என்னம்மா இந்த பாட்டு இப்படி ரசிக்கிற என கேட்க அப்போதுதான்

கண் விழித்தேன்...ஒண்ணுமில்ல அக்கா ,என சொல்லி

பார்க்க சுந்தரி ,இறங்க தயாரானாள் தாம்பரத்தில் ...

ரயில் நின்றதும் இறங்கி அவளை வழி அனுப்பி மீண்டும் ரயில்

உள்ளே நான் என்னுள்ளே அவனின் நினைவுகள்...

சுகமாக ஓடி கொண்டிருக்க "யம்மா வழி விடும்மா " என காட்டு

கத்தல் கத்தி கொண்டே அந்த கீரைக்காரி இறங்கினாள்.

அவளின் பிழைப்பே இந்த ரயில் தான் ...காலையில் அவளை பார்த்தால்

மங்களகரமாக அம்மன் போல இருப்பாள்..ஆனால் வாயிலிருந்து

வரும் அந்த புகையிலையின்

வாசம் குடலை புரட்டும்...ஆனால் நல்லவள் ,குடிகாரனுக்கு

பொண்டாட்டி.பிள்ளைகளை

படிக்க வைக்கணும் என்பதற்காகவே நாளெல்லாம் உழைப்பவள் ....

அவளுக்கு நான் என்றால் இஷ்டம் ..

நானும் இறங்கினேன் ..என்னோட அண்ணா எனக்காக காத்திருந்தார்

ரயில் நிலைய வாசலில் ...வேகமாக நடந்து

அண்ணாவின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன் ..அண்ணா எது பேசாமல்

மிதிக்க ஆரம்பித்தார் சைக்கிளின் வேகம் கூடியது

என்னோட நினைவுகளும் வேகமாக ஓடிகொண்டிருந்தது..எதிர்காற்றில்

வேகத்தை கூடி அண்ணா செல்ல ..அண்ணா கொஞ்சம் நிறுத்து அண்ணா

என சொல்லி கீழிறங்கினேன் வீடு வரை தள்ளி கொண்டே போகலாம்

என சொல்லி நடக்க ஆரம்பித்தோம்..அண்ணா பேசாமல் நடந்தார் ..

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அண்ணா எனை பார்த்து யாருக்காவது

நம்ம வீட்டு விலாசம் கொடுத்தியா மா .

இல்லையே அண்ணா ..அப்பாவுக்கு நண்பர்களை வீடு வரை கொண்டு

வருவது இஷ்டமில்லாத விஷயம் ,

அதிலும் உன் பெயர் போட்டு வாழ்த்து அட்டை வந்திருக்கு

என சொல்ல ,அதிர்ந்தேன் நான் ..

பயம் கூடியது யாராக இருக்கும் யாருக்கும் தரவில்லையே நான்..

அப்பா என்ன சொல்ல போகிறாரோ,என பயந்துகொண்டே நடந்தேன் .

அந்த எதிர்காற்றிலும் வேர்க்க ஆரம்பித்தது எனக்கு ...

வீடு நெருங்க நெருங்க வெலவெலத்து போனேன் நான்

No comments:

Post a Comment