Wednesday, October 17, 2012

"மதுரை "
வெகுநாட்கள் கழித்து அன்றுதான் நிம்மதியான உறக்கம் எனக்கு .. அதைக் கெடுத்த சத்தம் கேட்டு விழித்தேன்.. தாரணி! என் தங்கை..ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

நீளமான தலைமுடியை படிய வாரி அழகாய் ஒருசிறு ஒற்றைரோஜாவைக் காதோரம் செருகியபடி .. “ ண்ணா இப்ப ஓகே வா, ஒகே வா…” என்று கேட்டு கொண்டே இருந்தவளைப் பார்த்து.. “ம்.. நல்லா இருக்கும்மா..கிளம்பிட்டியா கொஞ்சம் இரேன் நானும் வரேன்..” என்று சொல்லிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து கிளம்ப ஆரம்பித்தேன்.

"ம்...கலையான முகம் தான் உனக்கு...நல்ல உயரம் தான் நீ..’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டு தலையை வாரி, அப்படியும் இப்படியும் கண்ணாடியில் பார்த்து கொண்டே சட்டையை இன் செய்து கிளம்பினேன்.

" டேய்...மதுரை.. போதும் டா உன் அலங்காரம்! யாரவது கண்ணு வைக்க போறாங்க’ என்று முகமெல்லாம் சிரிப்பாக, கைகளால் திருஷ்டி கழித்தாள் அம்மா!
“வைக்கட்டும்…வைக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை எடுத்து தங்கையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஏரிக்கரையின் எதிர் காற்றில் வேகமாகப் பறந்தேன்!

“ஏன் தாரு! உன்னோட அந்த ஃப்ரெண்ட்,அதான்,அந்த சுந்தரி இன்னும் இங்கதான் இருக்காளா” என்று பட்டும் படாமலும் கேட்டேன். “இல்லண்ணா” என்ற தாருவின் ஒற்றைச்சொல் பதில் எனக்குள் ஏனோ அதிக ஏமாற்றமே தந்தது.
பேருந்து நிறுத்தத்தில் தாருவை இறக்கிவிட்டு தயாராய் இருந்தக் கல்லூரிப் பேருந்தில் ஏறியதும்
அவளது கையசைப்புக்கு தலையாட்டிவிட்டு, சைக்கிளை பக்கத்திலிருந்த வீட்டின் ஓரம் நிறுத்தி வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு வணக்கம் சொல்லி, சுந்தரியைப் பற்றிய எண்ண அலைகளை மனதுக்குள் ஓடவிட அதேநேரம் என்னுடைய பேருந்தும்
வர, தாவி ஏறியதும் “மனிதன் மாறவில்லை….
..ஓஹொஹோ…ஹோஹஹோ” என்று பலமாய் பாடல் ஒலித்தது...பிடிக்கிறதோ பிடிக்கலையோ கேட்டே ஆகவேண்டும்!

அந்த பாட்டுச் சத்தத்தையும் மீறிய ஒரு சிரிப்பு என் காதினில் ஒலிக்க, மெல்ல அது வந்த திசை நோக்கிப் பார்த்தபோது, கலர் கலராய் தாவணிகள்! அந்த கலைக் கல்லூரியின் மாணவிகள் !

“ஏய்! மலர்.. சும்மாயிரு.. போதும் டி சிரிச்சது ..பல்லு கில்லு சுளிக்கிகப்போவுது....” என்ற ஒரு கண்டிப்புக் குரல் ...அதையும் மீறி அவள் கலகலவென சிரித்தாள். அடுத்த நிறுத்தத்தில் அந்த மலரும் அவளின் தோழியும் இறங்கிச் சென்றனர்.

"நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா" என்ற வரிகளுடன் பேருந்து கிளம்பியது.. ‘என்னது இது, இதுவரையில் ஒலித்தபாடல் ஏதும் ஏன் என்காதில் கேட்காமல்போனது’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நேற்றே வந்து மருத்துவமனை இருக்கும் இடம் தெரிந்து கொண்டதால் இன்று வசதியாக இருந்தது எனக்கு , அடுத்த நிறுத்தம் நான் இறங்கவேண்டியது. கண் மருத்துவமனையின் ஸ்பெஷல் நிறுத்தம் அது. அதற்கு முன்னரே எழுந்து படிக்கட்டை அடைந்தேன்.
பேருந்தின் வேகத்தில் என்னை தீண்டிய காற்றை ரசித்து கொண்டிருக்கையிலேயே இறங்குமிடம் வர காற்றின் சுகம் தடைபட்ட வருத்தம் வந்தது!

வேறிடத்திலிருந்து மாற்றலாகி வந்த எனக்கு அன்றுதான் முதல்நாள்."சுந்தரி நீயும்
சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோனம்…ஓஹோ…ஹோஹோ..” என்னைக் கேட்காமலே உள் மனம் பாட்டுபாடியது!

பூத்துக்குலுங்கிய மரங்களுக்கிடையே... இதமானதொரு காலை வெய்யிலில் 5 நிமிடம் நடந்ததும் எங்கள் மருத்துவமனை!

உள்ளே நுழையும்போதே "அஞ்சு வரேன்னாளே..இன்னும் காணலையே..
எப்படி போறது .. இந்த கண்ணு வேற கூசித்தொலையுதே.. என்ற வயதான அம்மாவின் குரல் காதுகளில் ஒலிக்க, தயங்கி நின்ற என்னை, “தம்பி..கொஞ்சம் அந்த வாசல்வரை கூட்டிட்டு போய் விடுங்களேன்” என்றபோது, "ஒரு நிமிஷம் பாட்டி.. இங்கேயே இருங்கள் தோ வரேன்” ன்னு சொல்லி வேகமாய் உள்ளே சென்று கைவிரல் பதிந்து ....நேரம் பதிந்து வேகமாய் வந்தபோது, பாட்டி அங்கயே நின்று கொண்டிருந்தார்.

அவரது கையைப் பற்றி நடந்துகொண்டே “யாரும் கூட வரலியா பாட்டி ஏன் தனியா வந்தீங்க” என்று கேட்க
“என் பேத்தி வரேன்னு சொல்லிருந்தா தம்பி ஆனா காணலை அவ வந்தா பத்திரமாக அழைச்சுட்டு போவா ..ஏன் வரலைன்னு தெரிலியே” என்றார்.

“சரி! நீங்க எங்கே போகணும்?” ன்னு கேட்டதை காதில் வாங்கிகொள்ளாது தன் பேத்தி வராததையே சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் பாட்டி .

பேருந்து நிறுத்தம் வரை போய், “பாட்டி நீங்க எங்கே போகணும்” னு சொல்லுங்க” என நான் கேட்டுக்கொண்டே அருகிலிருக்கும் டீக்கடை பெஞ்சில் உட்காரவைக்க,
கையை வேகமாய் உதறி மெளனமாய் உட்கார்ந்த பாட்டியை அதிசயமாய் பார்த்தேன்.

‘பாட்டி ஏனிப்படி நடந்துகிறாங்க! வந்த முதல்நாளே இப்படியா! என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை!’ என்று நொந்துகொண்டே டீகடைக்காரிடம் “அண்ணே, இந்த பாட்டிகூட யாரவது வந்ததைப் பார்த்தீங்களா நீங்க” என்றேன்.அவர் “யாரைச் சொல்றீங்க தம்பி” என்றதும், திரும்பிப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தால்..
யாருமில்லை அங்கு பெஞ்ச் காலியாக இருந்தது !!
படபடப்புடன் சாலையை நோக்க சாலையை நோக்க வெளிச்சம் கண்ணை கூசியது ………..

3 comments:

 1. மிக நன்று!

  வெகு இயல்பான நடை..

  ஒவ்வொரு காட்சியும் மாறும்பொது கதையின் ஓட்டத்தில் சூடுபிடிக்க வைக்கின்றது..

  பாட்டி யாரென்று உணர்த்தி.. பயம்தந்த விதம்..நீங்கள் நல்ல பேய்க்கதை எழுதாளர் என்பதாய்க் காட்டுகின்றது.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. migavum arumaiyaga ullathu.

  ReplyDelete