Thursday, November 1, 2012

நிசப்தத்தின் ஓசை




நிசப்தமான இரவு நேரம் ,நாய் ஒன்று தூரத்தில் ஊளையிட்டு கொண்டிருக்கும் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு விழித்தேன்,மெல்ல எழுந்து வாக்கிங் ஸ்டிக்கோடு ஹாலுக்கு வந்தேன் ,அந்த சத்தம் குறைவதாக இல்லை,ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து பருகினேன் ,அங்கிருக்கும் கடிகாரம் 1மணியை காட்டியது, மெல்ல படுக்கையறைக்கு வந்தேன் ,அந்த சத்தம் குறைய மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

இருள்மூடிய காலைவேளை, பனியின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. எழுந்திருக்க மனமில்லாமல் கட்டிலில் புரண்டு படுத்தேன், தூக்கம் என்னை மீண்டும் தழுவிக்கொண்டது. நேரம் ஓடியது. “நித்தீ! கார்த்தீ!” என்று குரல்கொடுத்தபடி நடைபயிற்சிக்குக் கிளம்பினேன். “கிளம்பிட்டீங்களா..?” என்று குரல் கொடுக்க, வந்தார்கள் என்னிரு செல்வங்களும்!

நான் எப்போதும் அணியும் அதே வெள்ளைநிற சட்டை, அவர்களும் அதே நிறத்தில்! எனக்கும் முன்னதாய் இருவரும் சின்ன துள்ளலுடன் ஓட்டத்தை துவங்கினர். இராணுவம் தந்த, கண்டிப்பு ஆனால் மிடுக்கான, வழக்கமான, வேகநடையில் நான் நடக்க, எதிரில் வந்த பக்கத்து வீட்டுக்காரர் சின்னப் புன்னகையுடன் “வணக்கம் சார்!” எனக்கூறி கடந்து போனார், நான் நடையை மிதமாக்கி என் செல்லங்களைப் பார்க்க warm-up செய்து கொண்டிருந்தார்கள்.

‘டிங்…டாங்கென்று’ காலிங்பெல் அடிக்க, சட்டெனத் திரும்பி பொத்தென விழுந்தேன் படுக்கையிலிருந்து! ‘அப்பப்பா…எப்போதும் அதே கனவு, பிள்ளைகளின் நினைவாகவே!’. சிரித்துக்கொண்டே எழுந்தேன் வாக்கிங் ஸ்டிக்கோடு. மெதுவாகப்போய்க் கதவைத் திறக்க, வேலைக்காரப் பெண் மல்லிகா நின்றிருந்தாள்.

நகர்ந்து நான் வழிவிட, ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று பரபரவெனத் தன் வேலையைத் தொடங்கினாள்.வளவளாவென்று பேசி அரைகுறை வேலை செய்பவர்களைப் போலல்ல அவள், ஒன்றுவிடாமல் எல்லா வேலைகளையும் பேசாமல் செய்து முடிக்கும் விதம்! அவளுக்கு என்னைக் கண்டால் பயம் என்பதைவிட, என் கண்டிப்பைக் கண்டு பயம், என் வீட்டார் போலவே.

என் காலைக் கடைமையில் ஒன்றான நடைபயிற்சி செய்யத் துவங்கினேன். நான் முன்னோக்கி நடந்தாலும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. செல்லம்மாவுடன் இணைந்திருந்த அந்த நாட்கள், என் கண்டிப்பில் அவளும், பிள்ளைகளும் வாழ்ந்தது, அவர்களோடு நான் கடந்த நாட்கள் என அனைத்தையும் பெருமையுடன் அசைபோட்டது மனம்.

நித்தியா அமெரிக்காவிலும், கார்த்தி கனடாவிலும் செட்டில் ஆகி விட்டனர். நான் மட்டும் அவளின்றி இங்கு அவளுடைய பிரம்மாண்ட எண்ணங்களால் உருவான வீட்டில் தனித்து! ‘அம்மா மட்டும் இருந்திருந்தால்’ என்ற வார்த்தைகளை மல்லிகா அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள். என்னைக் கண்டதும் அமைதியாவாள். .

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். கொஞ்சம் அதிகமாக நடந்துவிட்டேனா என யோசித்துக் கொண்டே நிமிர, மல்லிகா வெளியே கிளம்ப ரெடியாக நின்று கொண்டிருந்தாள். “ஐயா, வேலைய முடிச்சுட்டேன் சமையல் செய்து, சாப்பாட்டு டேபிளில் வச்சுருக்கேன், அப்றம்.. நீங்க நாளை வர சொல்லியதாக டாக்டரிடம் சொல்லிட்டேன் பால் பாக்கட்டை ஃபிரிட்ஜில் வைக்கனும் அதான் பாக்கி” எனக்கூறி எடுக்க வெளிவாசலுக்கு போனாள். மனதை என்னமோ செய்தது, உடல் வியர்த்தது படபடப்பும் கூடியது.
காற்றோட்டத்தில் போய் கொஞ்சம் நின்றால் இதமாயிருக்கும் என்று மெல்ல வெளியே வந்து தோட்டத்தில் இருந்த அந்த அழகான ஜெர்மன் கிரில் பெஞ்சில் அமர்ந்தேன்.

அவளுக்குப் பிடித்த அந்த தோட்டத்தில் அவளுக்குப் பிடித்த அந்த பெஞ்சில் அமரும்போது அவளுடன் இருப்பதாகவே ஒரு நினைவு எனக்கு.

''பெண்மையின்றி… மண்ணில்…. இன்பம் ஏதடா
கண்ணைமூடி…. கனவில்… வாழும் மானிடா "


என்ற பாடல் சில்லென குளிர் காற்றாய் இதமாக வருட, என்னையே நான் பார்த்துக்கொண்டேன், இவ்வளவு வயதாகி விட்டதா எனக்கு! என்னையே கேட்டுக் கொண்டேன்.

இப்படிக் கேட்கும்போதெல்லாம், செல்லம்மா, “நீங்கள் எப்போதும் இளமைதான்” என்பாள். புது தெம்புடன் எழுந்தபோது..பால் பாக்கெட்டை கையில் எடுத்துகொண்டு உள்ளேவந்த மல்லிகா உடனே வெளியே ஓடினாள்.

‘என்ன ஆச்சு அவளுக்கு’ என்று ஆச்சர்யப்பட்ட என் கண்ணில் , வாடியிருந்த ரோஜாச்செடி பட்டது ‘இப்படி வாடியிருக்கிறதே , நேற்று தானே தண்ணீர் விட்டேன்’ எனக்குள் பேசிக் கொண்டே, செடி முழுக்க குளிரும்படி தண்ணீர்ப் பாய்ச்சினேன் .

மல்லிகா வீட்டினுள் போவதும் வெளியே வருவதுமாய் இருந்தாள். ஏன் யார்யாரோ வருகிறார்கள்.. யாரவர்கள்? இந்தக் காலை வேளையில் என்னைத்தேடி, எதற்கு? போய்க்கேட்போம்.. என்று வீட்டினுள் போக, ஓ, பக்கத்து வீட்டுக்காரர்! என்னைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் மட்டும் சொல்லும் வேறெதும் பேசசாத அவர் ஆச்சர்யமாய் இன்று என்னைத்தேடி வீட்டுக்கே வந்திருக்கார்? யோசித்துக்கொண்டே, “வணக்கம் , உக்காருங்கள் இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்.

ஆனால் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை, எதோ கஷ்டத்தில் வந்திருக்கிறார் போல என்று நினைத்து கொண்டே ஹாலுக்கு மீண்டும்வர, அவர் என்னுடைய தொலைபேசியை அனுமதியின்றி எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது எனக்குக் கோபமூட்டியது. ஓ! இதென்ன..உள்ளே இரண்டு போலீஸ்காரர்கள்? அவர்களை இவர் ஏன் வெளியே அழைத்து போய் பேசுகிறார்?
வெளியில்போய் அவர்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்டது. "சார் இந்தவீட்டில் வேலை செய்யும் மல்லிகாதான் முதலில் பார்த்தாங்க, அவங்க வரும் போது மில்ட்ரிக்காரர் நெஞ்சில் கை வைத்தபடி விழுந்துகிடந்திருக்கிறார்..பார்த்துட்டு பயந்துபோய் என்னை வந்து கூப்பிட்டதும் , நான் வந்து பார்த்தேன் நான் பாக்கும்போது மூச்சு இல்லை, அவருக்கு இங்கு யாருமில்லை..பிள்ளைங்க வெளிநாட்ல இருக்காங்க அதான் உடனே உங்களுக்கு தகவல் கொடுத்தேன்’ எனக் கூற..‘ஹெலோ நான் தான் இங்கு இருக்கிறேனே’ எனக் கூறியதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

என்ன நடக்குதிங்கேன்னு என் அறைக்கு போய் பார்க்க, அய்யோ அங்கு கிடப்பது யார் நானா? .அப்போ இங்கிருக்கும் நான் ? எப்படி? அப்போ நான் இறந்து விட்டேனா? அய்யோ நான் பார்ப்பது என் உடலையா..? அய்யோ.. என் செல்வங்களா.. உங்களைத் தவிக்கவிட்டு இறந்தேனா” என்றெண்ணியபோது ..

“அவர் யாரிடமும் பேசமாட்டார் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, அவரோட பிள்ளைகள் நம்பரும் தெரியாதே!” என்ன்றவர் சொல்ல.. மல்லிகா என் டைரியை நீட்டினாள். அதிலிருந்து நம்பர் எடுத்து டயல் செய்தார் கார்த்திக்கிற்கு.. கிடைக்கவில்லை… நித்திக்குப் பேசினார் “ஹலோ. நான் சென்னையிலிருந்து உங்க பக்கத்து வீட்டுக்காரர் பேசரேங்க.. ஸாரி சார்..இங்க உங்கப்பா தவறிட்டார்..” என்று நடந்ததை கூறிக்கொண்டிருந்தவரின் முகம் அதிர்ச்சியில் மாற ...

“என்னப்பா.. என்ன சொல்றாங்க அவங்க, என்ற போலீஸ்காரரிடம் “சார் அவங்க மகள் ‘அப்படியா போய்ட்டாரா.. காலத்துக்கும் ரூல்ஸ்பேசியே எங்களை ஏதையுமே அனுபவிக்கவிடலை இப்போ இங்கேயுமா? எங்களால இப்ப அங்க வரமுடியாதுங்க இதமாதிரி செத்துட்டவங்களுக்கு கார்பரெஷன் ரூல்ஸ் படி என்ன செய்னுமோ அதை செஞ்சுட்டு எவ்ளோன்னு மெசேஜ் குடுங்க உங்களுக்கு அனுப்பிடரோம்’ ன்னு சொல்லிப் போனை வெச்சிட்டாங்க சார்!”

“ஐய்யோ என் செல்வமா..என் பிள்ளையா இப்படி” என நான் கண்ணீர் விட்டுக் கதறிக்கதறி அழ, வந்துட்டீங்களா” என்றபடி வழிந்தோடிய கண்ணீரைத் தன் கரங்களால் துடைத்தாள் செல்லம்மாள்!


2 comments:

  1. நன்றாக எழுத்தியுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்!


    //" உடல் வியர்த்தது படபடப்பும் கூடியது"//

    ................................

    //" மில்ட்ரிக்காரர் நெஞ்சில் கை வைத்தபடி விழுந்துகிடந்திருக்கிறார்.."//

    இரண்டுக்கும் தொடர்பு இல்லாது..'எப்போது இறந்தார்?' என்பது கேள்வியாய் நிற்கின்றது!

    //"ஸாரி சார்..இங்க உங்க.....” //
    //“சார் அவங்க மகள் .. "//

    ஆண்பால் பெண்பால் குழப்பம் உள்ளது.

    ReplyDelete
  2. நல்ல பதிவு...இதை எல்லோரும் படிக்க ஷேர் பண்ணுங்க மேடம்...

    ReplyDelete