Saturday, December 22, 2012

"குமரி "



கிளாஸ்ல உக்காந்திருக்க பிடிக்காம வாத்தி கிட்ட “பாத்ரூம்” போறேன்னு பொய் சொல்லிட்டு வெளியே வந்திட்டேன் .ஸ்கூல் முழுக்க சுத்தினேன் ,எதிர்பட்ட வாத்திங்க கேக்கும்போது ‘அந்த கிளாசுக்கு போக சொன்னாரு’ ‘எங்க வாத்தி அத வாங்க சொன்னாரு.. இத வாங்கியார சொன்னாரு’ன்னு பொய் சொல்லிட்டு மதியம் வரைக்கும் வெளியவே இருந்தேன். சாப்பாட்டு பெல் அடிச்சதும் கணேசன் வந்தான் “ஏண்டா குமாரு இப்படி கிளாசுக்கு வராம இருந்திட்ட, நல்லா நடத்தினாரு வாத்தி, இன்னைக்கு தூக்கமே வரலடா கிளாஸ்ல, நல்ல மார்க் வாங்குவ இப்படி கிளாசுக்கு வராம இருந்தா… என்னடா பண்ணபோற...சாயந்திரம் நான் உங்க வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட சொல்லறேன், நீ இப்போ எல்லாம் சரியாய் கிளாசுக்கு வரதில்லைன்னு!”
“வேணாம்டா, கணேசு வேணாம், சொல்லாதடா அம்மா அடிக்கும்டா என்ன, அதுக்கு நான் படிக்கணும், பெரிய ஆளா வரணும்னு ரொம்ப ஆசைடா”. “அப்போ நீ ஒழுங்க கிளாசுல இருக்கணும்….நான் அம்மாகிட்ட சொல்லல” என்றான் கணேசு. “ம்”என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட்டு
பெண் பிள்ளைக சாப்பிட்டுகொண்டிருப்பதையே பார்த்துகொண்டிருந்தேன். முதுகில தட்டி, “குமாரு அங்கன என்ன பாக்குற ஏற்கனவே கணக்கு வாத்தி அடிச்சத மறந்திட்டியா..டேய் குமாரு வா சாப்பிட்டு கிளாசுக்கு போவோம்” என்று சொல்லி இழுத்துகொண்டு போனான் சாப்பிட.
மதிய வகுப்பில் எனக்கு பிடித்த ஆசிரியை கிளாஸ் எடுத்தாங்க , அவங்க சொல்லித்தரது மட்டும் இல்லாம அவங்க சடை அவங்க வைத்துகொண்டிருந்த ஒற்றை ரோஜா ,இதையும் சேர்த்து கவனித்ததில பாடம் சூப்பெரா மண்டைக்குள்ள போய்டிச்சி..எப்படி சொல்றது அம்மா கிட்ட?, அம்மா எப்படி இத புரிஞ்சிக்கும் எனக்கு பயமாவே இருந்தது, “என்னடா யோசிச்சிட்டே வர, குமாரு.. இப்போவெல்லாம் நீ சரியாய் இல்லடா”, “கணேசு என்ன சொல்ற நீ!” “ஒண்ணுமில்ல டா குமாரு
..அங்க பாரு உங்க அம்மா தூக்க முடியாம தூக்கிட்டு வருது பாரு ,போய் வாங்குடா” என கத்தினான். நான் ஓடிப்போய் அம்மாவிடம் வாங்கிய கூடையை இடுப்பில் வைத்துகொண்டு நடக்க, அம்மா என்னை ஒரு மாதிரி பார்த்துகொண்டே கணேசிடம் பேசினாள், “இந்த வருஷம் முடிச்சிட்டு டவுனுல நீ படிக்க போறியாமே ,நம்ம குமாருவையும் நீ படிக்கிற இடத்தில சேர்க்கணும் ,உங்க அப்பா வீட்ல காலையில எத்தன மணிக்கு இருப்பாரு கணேசு?” என அம்மா கேட்க “ஏழு மணிக்கு அத்த” ன்னு சொல்லிட்டு அவங்க சந்தில திரும்பிட்டான்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா கூடையை வாங்கி வெச்சிட்டு, “இரு குமாரு கொப்பிய குடிச்சிசிட்டு டியூஷனுக்கு போகலாம்”னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே,நான் கண்ணாடிய பார்த்து நெற்றில வந்த வியர்வையை தொடைத்துகொண்டே கண்ணை அங்கும் இங்கும் உருட்டி,அரும்பு மீசையை மறைத்து பார்த்து கொண்டிருந்ததை பார்த்த அம்மா வந்து கண்ணாடியை பிடுங்கினாள், “என்னதான் நினசிட்டிருக்க குமாரு? நீ செய்யறது சரி இல்ல, எப்போ பாரு கண்ணாடி பாக்கிற,புடவையை எடுத்து சுத்திகிற”னு அம்மா சத்தம்போட, “அம்மா டியூஷனுக்கு கிளம்பறேன்”னு போய்ட்டேன்.
டியூஷன் முடிஞ்சி வீட்டுக்கு வரும்போதே வாசல்ல அம்மா உக்காந்துட்டு இருந்திச்சி , அம்மா கிட்ட போயி மடில தலை வச்சி படுத்துகிட்டேன் ,அம்மா என்னோட நெத்தில கை வெச்சி “உனக்கு என்ன ஆச்சி ஏன் இப்படி நடந்துக்கிர”னு கேட்டு மெல்ல தலைய வருடி கொடுத்திச்சி.அம்மா கை மேல பட்டவுடனே எனக்கு அழுகைவந்திடிச்சி “அழாதே குமாரு முத அம்மா கிட்ட பேசு”னு சொல்லவும், அம்மா கைய பிடிச்சி உள்ள கூட்டிட்டு போயிட்டு அம்மா கால் விழுந்தேன், “அம்மா எனக்கு இப்படி வாழ பிடிக்கல அம்மா ,என் மனசு சொல்லுது என்னை பொம்பளைன்னு, அத மறுத்து இப்படி பொய்யான வாழ பிடிக்கல,நான் என்ன செய்யம்மா”னு கதற...என்னை தன்னுள் அணைத்த அம்மா, “அவரு வந்தா என்ன சொல்லுவேன்”னு சொல்லி அழ ,அம்மாவின் பிடியிலிருந்து விலகி மெல்ல அம்மாவை அணைத்த நான் “அம்மா நீ சொல்றதுபோல நான் உன்னைய நல்லா கவனிச்சிக்கிறேன்,இன்னும் படிக்கிறேன் ,ஆனா இந்த எண்ணத்தை மட்டும் என்னால மாத்திக்க முடியல”னு சொல்லவும்,அம்மா என்னையவே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணில் நீரோடு,அம்மாவை பார்த்துக்கொண்டே உறங்கிபோனேன் நான்.
திடிரென்று சத்தம், கேட்டு விழிக்க ,அம்மாவை போட்டு அப்பா அடித்து கொண்டிருந்தார், “உன்னாலதான் இப்படி ஒத்த பிள்ளைய வளர்க்க நாதியில்லாத நாயி நீ செத்து தொலையேன்”னு அப்பா சொன்னது என் காதில் கேட்க, ஒருமுடிவுடன் இருக்கக் கண்ணை மூடிக் கொண்டேன்.
“மேடம் நீங்க கேட்ட இடம் வந்திடிச்சி னு சொல்லவும் ,கண்ணில் வழியும் நீரை துடைத்துக்கொண்டு விழித்தேன் ,டிரைவரிடம் கொஞ்சம் முன்ன போங்க அப்படியே அந்த கடைசி தெருவுக்கு முன்னால நிறுத்திகோங்க .கார் நிறுத்தவும் சிண்டும்,பெரிசுகளும் என காரை சுற்றி ,இன்னும் அப்படியேதான் இருக்கு ,அதே டீக்கடை ,அதே பள்ளிக்கூடம்,அதே தெரு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது எங்க ஊரு "கல்லுகுட்டை"
எதோ நடிகை போல இருகாங்க ? யாரு யாரு இவங்க னு பேசிக்கிற சத்தம் மட்டும் கேட்க, மாற்றத்துடன் நான் 15 வருடம் கழித்து அம்மாவை சந்திக்க "குமாரியாய் " ,குமரியாய் நடந்து கொண்டிருக்க ,என்னோட படித்த கணேசு என்னை பார்த்தபடி பால் எடுத்துகொண்டு போனான்.இன்னும் அப்படியே அவன் குடும்ப தொழிலை மறக்காமல் .
வாசலில் அம்மா! கயித்து கட்டிலில் அப்பா! வயோதிகம் அவரை அதிகம் தின்றுகொண்டிருந்தது. அம்மா என் கண்ணுக்கு அப்படியே இருந்தாள். “இங்க குமாரோட அம்மா நீங்கதானே”னு சொல்லிக் கேட்கவும் , “நீங்க யாரு?... எதுக்கு கேக்கறீங்க?” னு கேட்டபடி பக்கத்தில வந்த அம்மா "குமாரு!... வா!..” என்று சத்தமில்லாமல் என்னைக் கூப்பிட்டு, “ஏங்க இங்க வந்து யாரு வந்திருக்கான்னு பாருங்க”னு அப்பாவிடம் சொல்லிவிட்டு உள்ளே போனாள் அம்மா. கண்ணைச் சுருக்கிவைத்து என்னைக் கிட்டத்தில வந்து பார்த்த அப்பா “குமாரு…வந்திட்டியா!” என சொல்லிக் கட்டிக்கொண்டார். பட்டவேதனைகளும் வலிகளும் மறந்தது அப்பாவின் இறுக்கத்தில்……..!

Wednesday, December 5, 2012

காதலிக்கப்பட்டவன்



காதலிக்கப்பட்டவன்


காதலிக்கப்பட்டவன்

இதயத்தில் நான் மட்டுமே ...

எதோ புரிதலில் என்று

நினைக்கும்முன்,

உன் உயிர் என்றாய்..

ஏதும் சொல்ல நினைக்கும்

முன், என் வார்த்தைகளை,

உன் நினைவினாலே

நிறுத்தினாய், உண்மை..

இது என்று...விழிகளில்

பேசிய நேரம் போக,

கைபேசியும் போதவில்லை

என் வாழ்வு முழுதும்

போதாது உன்னுடன் பேச,

என்று சொன்ன நீ, பேசாமல்

உன் வாழ்வினில் இருகின்றாய் ..

உன்னுடனான என் புரிதல்,

எனக்கு புரியும் முன்

என்னுடனான உன் வாழ்வு

இன்று உன் வாழ்வாகி போனது .

விலக்கப்பட்டதால்

விலகித்தான்

போனேன் ....

விளங்காமல் தான்

நிற்கிறேன்

உன் நினைவுகளால்

நிரம்பிய என் வாழ்வில் ...