Saturday, April 13, 2013

உன் முப்பொழுதுகளிலும் காதல் மட்டுமே!!!!!

என் முப்பொழுதுகளும்

உன்னுடையதெனின்,
உனை நினைக்கும்
பொழுதுகளே
என்னிடம் இல்லை”
*******************************************
”சின்ன சங்கிலியில்
உயிரெழுத்தாய் -என்
முதலெழுத்தை
இணைத்து கொண்டாய்”
***********************************************
உனை காணாமல்
தவித்த என் விழிகளும்
இதழுடன் சேர்ந்து
புன்னகைத்தது ,
நீ வருகிறாய் என் பொழுதுகள் முழுதும்
*********************************************
என் மனதில் உறைந்த
உன் நினைவுகள்
உருகி தான் போயின
சலனத்தில் ”
”உறைந்து போன
உன் நினைவுகளால்
மரத்துதான் போன மனம் என் பொழுதுகள் முழுதும்
**********************************************
ஒளி கீற்றுகளுக்குள்
சிக்கிய இருளாய்
உன் புன்னகை
எனக்குள் பொதிந்து
கிடக்கிறது, உனை
காணும் வரை”
உனை எதிர்பார்த்து
காத்திருப்பதுமில்லை
நீயே நானான பொழுதுகளில்”
**************************************************

”காதலில் வீழ்ந்தது முதலில்

நான்தான், என்று பொய்யாய்
சொல்லி, ரசிக்கிறாய் என்னை உன் முப்பொழுதுகளிலும் ”

Friday, March 22, 2013

தம்பி.....................



உனை காண வரும்
பொழுதில், உன்
உயிர் துடித்து
விடை பெறும்
தருணம்
உனை பெயர்
சொல்லி அழைத்தேனே
தெரிந்ததா உனக்கு?என்னை

எனை பார்த்தாயா?
எப்படி வந்தேன்!
என நினைத்தாயா?
என் கண்ணீர் கண்டாயா?

உன் விழியோர கண்ணீர்
வழிந்தோடி உன்
அன்பு கூற..உன் மூச்சு
மேலும் கீழுமாய்
எனை வா, என்று
சொல்வது போல்,
அய்யோ!!! என அலரும்
குரல். அந்த தருணம்

உன் முகம் நான்
பார்க்க, எங்கேயடா
போனாய்!
எப்படியடா போனாய் !
எங்களை விட்டு
உன் உயிர் காற்று
காண்கையிலேயே
காணாமல் போனது
எப்படி!!!!

எங்கு எப்போது
காண்பேன்
உனை இனி.
வாழ்வு உனக்கு
ஏனடா ? முடிந்தது?
போதுமா டா?
இவ்வுலக வாழ்வு...

Tuesday, February 5, 2013

"இதழ் கொல்லும் "




"உன் இதழ் புன்னகையாய்
உன் உயிர் வண்ணம்
எனக்குள் வானவில்லாக
கவிந்து கிடக்கு "


"இதழ்களின் இணைப்பில் தான்
உன் குறுஞ்செய்தி யும் எனக்குள்ளே
இனிமையாய் "


"உன் இதழ் தழுவிய
வார்த்தைகள்
என் மீது கோபமாய்
அன்பாய் ,ஆறுதலாய்
எப்போதும் "



"உன் மௌன புன்னகையில்
உன் இதழ் வழியும்
அன்பு எனக்கு மட்டுமே புரியும் "


"உன் இதழுக்கு மட்டுமே
முதல் உரிமை
உன் வார்த்தைகளின் தழுவல் "


"உன் கண்ணீரின்
சுவையும் ,வலியும் ,
உன் இதழுக்கே முதலில் "

"உன் சிறு புன்னகையே
இதழின் மொழி


"உன் சிறு புன்னகையே
இதழின் மொழி
உன் சிறு விழியசைவே
எனக்கான மொழி
மொழி உள் வாங்கிய
இதழ் தேன் நீ "


தோட்டத்து வீடு




கவிதா - அவள் காத்திருந்த நேரத்தைவிட, எதிர்கொண்டு நின்றிருந்த சாலையின் நீளம் அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை. நரேனை எங்கும் காணவில்லை. எப்படி தேடுவது! என்ன செய்வது! இந்த இடமோ அவளுக்கு புதியது, பஸ்ஸில் போகும்போது மட்டுமே இந்த இடத்தை பார்த்திருக்கிறேன். நரேன்கிட்ட வரேன்னு சொன்னது தப்போ? பயமா இருக்கேனு நினைக்கும்போதே, தோட்டத்தை பற்றி நரேன் சொன்னது நினைவுக்குவர, அதைப்பார்க்கும் ஆசையும் அவளுக்கு அதிகமாகிக்கொண்டே இருந்தது.


அவளை நினைத்து எனக்கே கொஞ்சம் பயமாகவும் வியப்பாகவும் இருந்தது, நரேன் வரட்டும்…. ‘ஏன்டா இவ்வளவு நேரம் என்னை காக்க வைச்ச?’ ன்னு கேக்கணும்..

யோசித்துக்கொண்டே கவி சாலையைக் கடக்க எத்தனித்தபோது கேட்ட சத்தம் அவளை எங்கோ கொண்டுபோவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.


ரோட்டின் தனிமையைப் போக்க அடுத்த பஸ்சும்வர, பயமும் கூடியது. ‘என்னை யாரும் பார்த்து விடுவார்களோ’ , ‘நான் இங்கு நிற்பதை அம்மாவிடம் சொல்லிவிடுவார்களோ?? ’ என்றெண்ணியவாறு அந்த பஸ் நிறுத்தத்தின் அருகினில் இருந்த புளிய மரத்தின் பின் சென்று நின்றுகொண்டாள் கவி.

அப்படியே அந்த பக்கம் பார்த்தால்.. அறுவடை செய்யப்பட்ட நிலம், யாருமில்லாமல் வானம் பார்த்திருந்தது , ‘நான் நரேனுக்காக காத்திருப்பது போல!..ம்.. இந்நேரத்திலும் என் யோசனை இப்படிப் போகுதே ...வருவானா?
ரொம்ப தூரத்தில் ஒரு சைக்கிள்.. வருவது நரேனா ?? ஆமா.. அவன்தான்!’ ‘வரட்டும் இன்னைக்கு அவனுக்கு இருக்கு’ என தனக்கத்த் தானே சொல்லிக்கொண்டு கோவத்தை இதழில் பொருத்திக்கொண்டு ‘உம்மென்று’ அவனை எதிர்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் அவள்.


“கவி..கவி....பேசுடா.. உனக்குத் தெரியும்தானே.. எப்போதும் நான் உன்னை காக்க வைக்கமாட்டேன்னு… நீ என்கிட்டே பேசிடுவ.. எனக்குத் தெரியும்” னு சொல்லி சிரிக்க, “ம்க்கும்.. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல” ,என சொல்லி கொண்டேபுன்னகைத்தாள்.

“பஸ் நிறுத்ததில என்ன கூட்டம் கவி? ” எனக்கேட்ட நரேனிடம், பதில் ஏதும் கூறாமல்“நரேன், வா போகலாம்” என்றதும் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.


“நரேன் நான் சொல்றத கேக்கறியா?? ” “நீ சொல்றத நான் என்னைக்கு கேக்கமா இருந்திருக்கேன் கவி… சொல்லேன்” எனஆசையாய் சொல்ல, "அறுத்து வைக்கப்பட்ட கதிர்களும் அதை இழந்து கஷ்டப்படும் நிலங்களும்".. “கவி நீ அருமையா ரசிக்கிற, அதுக்குதான் உனக்கு கவினு பேர் வைத்து இருக்காங்க… எங்க மாமா”


“என்னது மாமாவா? டேய், எங்க அப்பா காதில விழுந்தது உன்னைய அவ்வளவுதான்” “என்ன செய்வாங்க கவி ? என்னைய வெட்டிடுவாங்களா ? கவி ..என்ன ஆனாலும் நீதான் எனக்கு பொண்டாட்டி”, சொல்லி கொண்டே, அவளின் கையை இருக்கப் பிடித்துக் கொண்டபடி
"இந்த பிடிதளர்ந்தாலும், என் அன்பு பிடி தளராது " என்றான்.


“எங்க தோட்டத்த பார்த்தா, கவிதை சொல்லிட்டே இருப்ப, என்கூட பேசக்கூட உனக்கு நேரம் இருக்காது கவி.
அதோ தெரியுதே…அதான் எங்க தோட்டம்” எனச் சொல்லி அவளின் கையை விடுத்து அவளுக்கு முன்பாக தோட்டத்திற்குள் நுழைந்து சைக்கிளை நிறுத்திவிட்டு “இளநீர் பறித்து வா, அப்படியே இரண்டு பேருக்கு மதிய உணவு ரெடிசெய்” என தோட்டக்காரனிடம் சொன்னான் நரேன்.

“வேறு யாரும் வருவாங்களாய்யா? " என்ற கேள்விக்கு பதில் கூறாமல் தென்னை மரங்களுக்கிடையே கிடந்த கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த கவியினருகில் போய் அவளைக் கண்கொட்டாது பார்க்க…“நரேன்... நரேன்... " ன்னு அவள் கூப்பிட்ட குரலில் கிறங்கித்தான் போனான். “கவி, உன் கவிதைக்காகவே காத்திருக்கிறேன்” ன்னு சொல்லி முடிக்கும்முன் அவள் கவிதை சொல்ல ஆரம்பித்து… பேசப் பேச நேரம் போனதே தெரியவில்லை.

தோட்டக்காரர் கொண்டு வந்து வைத்த இளநீர்கள் காலியாகின. கவியின் கவிதை மழையில் நனைந்தபின் , “சாப்பிட போகலாமா.. ” என்ற நரேனிடம் “எனக்கு பசியே இல்லை நரேன் இந்த இடத்தை பார்த்ததும் பசியே போய்விட்டது” என்றாள்.


“ம். சாப்டாம இருக்க கூடாது வா! சாப்பிட போகலாம்
மதியம் 2 மணி, பஸ்ஸை நீ ,பிடிக்கணும் நினவிருக்கா கவி” என்றவன் சொன்னபோது “அய்யா… வேறு யாரும் வருவாங்களா ? ரெண்டு பேருக்கு சமைக்க சொன்னீங்களே…” என்ற தோட்டக்காரனிடம்
“நீ வெளியில இரு.. நான் சாப்பிட்டு வந்து உன்னிடம் பேசறேன்” ன்னு சொல்ல,மெல்லமாக புலம்பிக்கொண்டே வெளியே போனான் நடேசன்.
“கவிதா, நீ சாப்பிடு டா” என்றபடி, நரேனும் சாப்பிட ஆரம்பித்தான். கவிதா அமைதியாய் சாப்பிட்டாள்.

நடேசனிடம் பஸ் நிறுத்தம் வரை போயிட்டு வரேன்னு சொல்லிட்டு, சைக்கிளை எடுத்து கொண்டு நரேன் கவியுடன் கிளம்ப அதுவரை அமைதியாயிருந்த நடேசன் “அய்யா, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், நம்ம தோட்டத்துக்கு பக்கத்திலிருக்கும் பஸ் நிறுத்ததில ,இன்னைக்கு காலையில ஒரு ஆக்சிடென்ட் அய்யா. அதனால, இந்த மதிய நேரத்தில அங்க நீங்க போகவேணாம்ய்யா, கொஞ்சநேரம் இருந்துட்டு சாயங்காலம் போங்களேன்”. “நீங்க இங்க வந்ததில இருந்து சரியில்லை தனியாவே பேசிட்டு இருக்கீங்க! என்னாச்சு அய்யா, உங்களுக்கு! ” என நடேசன் சொல்லி கொண்டேயிருக்க.....அதுவரை அமைதியாய் கேட்டு கொண்டு நரேனருகில் நின்றுகொண்டிருந்த கவி ஏதும் கூறாமல் வேகமாக போக ஆரம்பித்தாள்.

“கவி....கவி ... ” அவளை தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே நரேன் போக, அவன் பின்னே நடேசன் ஓடி வர,
வேகமாக நடந்து போனாள் கவி.

நரேன் பஸ் நிறுத்தம் வந்து பார்த்தபோது அங்கு கவிதாவை காணவில்லை!


ஒரு வித நடுக்கத்துடன் நரேன் நடேசனைப் பார்க்க, அவன் “இங்கதான்யா.. இந்த புளிய மரத்துக்கு நேரதான் ஆக்சிடென்ட் நடந்திச்சி ”
என்றதும், “அய்யோ! கவி.. கவி.. ” என அரட்டிகொண்டே ரோட்டில் ஓட.............

“அய்யா, எங்களை விட்டுட்டு போய்டீங்களே அய்யா, என நடேசன் கதறுவதைப் பொருட்படுத்தாமல் புளிய மரத்தின் அருகினில் நின்றிருந்த கவிதாவின் கையைப் பிடித்து கொண்டு தோட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தான் நரேன்.

Saturday, December 22, 2012

"குமரி "



கிளாஸ்ல உக்காந்திருக்க பிடிக்காம வாத்தி கிட்ட “பாத்ரூம்” போறேன்னு பொய் சொல்லிட்டு வெளியே வந்திட்டேன் .ஸ்கூல் முழுக்க சுத்தினேன் ,எதிர்பட்ட வாத்திங்க கேக்கும்போது ‘அந்த கிளாசுக்கு போக சொன்னாரு’ ‘எங்க வாத்தி அத வாங்க சொன்னாரு.. இத வாங்கியார சொன்னாரு’ன்னு பொய் சொல்லிட்டு மதியம் வரைக்கும் வெளியவே இருந்தேன். சாப்பாட்டு பெல் அடிச்சதும் கணேசன் வந்தான் “ஏண்டா குமாரு இப்படி கிளாசுக்கு வராம இருந்திட்ட, நல்லா நடத்தினாரு வாத்தி, இன்னைக்கு தூக்கமே வரலடா கிளாஸ்ல, நல்ல மார்க் வாங்குவ இப்படி கிளாசுக்கு வராம இருந்தா… என்னடா பண்ணபோற...சாயந்திரம் நான் உங்க வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட சொல்லறேன், நீ இப்போ எல்லாம் சரியாய் கிளாசுக்கு வரதில்லைன்னு!”
“வேணாம்டா, கணேசு வேணாம், சொல்லாதடா அம்மா அடிக்கும்டா என்ன, அதுக்கு நான் படிக்கணும், பெரிய ஆளா வரணும்னு ரொம்ப ஆசைடா”. “அப்போ நீ ஒழுங்க கிளாசுல இருக்கணும்….நான் அம்மாகிட்ட சொல்லல” என்றான் கணேசு. “ம்”என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட்டு
பெண் பிள்ளைக சாப்பிட்டுகொண்டிருப்பதையே பார்த்துகொண்டிருந்தேன். முதுகில தட்டி, “குமாரு அங்கன என்ன பாக்குற ஏற்கனவே கணக்கு வாத்தி அடிச்சத மறந்திட்டியா..டேய் குமாரு வா சாப்பிட்டு கிளாசுக்கு போவோம்” என்று சொல்லி இழுத்துகொண்டு போனான் சாப்பிட.
மதிய வகுப்பில் எனக்கு பிடித்த ஆசிரியை கிளாஸ் எடுத்தாங்க , அவங்க சொல்லித்தரது மட்டும் இல்லாம அவங்க சடை அவங்க வைத்துகொண்டிருந்த ஒற்றை ரோஜா ,இதையும் சேர்த்து கவனித்ததில பாடம் சூப்பெரா மண்டைக்குள்ள போய்டிச்சி..எப்படி சொல்றது அம்மா கிட்ட?, அம்மா எப்படி இத புரிஞ்சிக்கும் எனக்கு பயமாவே இருந்தது, “என்னடா யோசிச்சிட்டே வர, குமாரு.. இப்போவெல்லாம் நீ சரியாய் இல்லடா”, “கணேசு என்ன சொல்ற நீ!” “ஒண்ணுமில்ல டா குமாரு
..அங்க பாரு உங்க அம்மா தூக்க முடியாம தூக்கிட்டு வருது பாரு ,போய் வாங்குடா” என கத்தினான். நான் ஓடிப்போய் அம்மாவிடம் வாங்கிய கூடையை இடுப்பில் வைத்துகொண்டு நடக்க, அம்மா என்னை ஒரு மாதிரி பார்த்துகொண்டே கணேசிடம் பேசினாள், “இந்த வருஷம் முடிச்சிட்டு டவுனுல நீ படிக்க போறியாமே ,நம்ம குமாருவையும் நீ படிக்கிற இடத்தில சேர்க்கணும் ,உங்க அப்பா வீட்ல காலையில எத்தன மணிக்கு இருப்பாரு கணேசு?” என அம்மா கேட்க “ஏழு மணிக்கு அத்த” ன்னு சொல்லிட்டு அவங்க சந்தில திரும்பிட்டான்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா கூடையை வாங்கி வெச்சிட்டு, “இரு குமாரு கொப்பிய குடிச்சிசிட்டு டியூஷனுக்கு போகலாம்”னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே,நான் கண்ணாடிய பார்த்து நெற்றில வந்த வியர்வையை தொடைத்துகொண்டே கண்ணை அங்கும் இங்கும் உருட்டி,அரும்பு மீசையை மறைத்து பார்த்து கொண்டிருந்ததை பார்த்த அம்மா வந்து கண்ணாடியை பிடுங்கினாள், “என்னதான் நினசிட்டிருக்க குமாரு? நீ செய்யறது சரி இல்ல, எப்போ பாரு கண்ணாடி பாக்கிற,புடவையை எடுத்து சுத்திகிற”னு அம்மா சத்தம்போட, “அம்மா டியூஷனுக்கு கிளம்பறேன்”னு போய்ட்டேன்.
டியூஷன் முடிஞ்சி வீட்டுக்கு வரும்போதே வாசல்ல அம்மா உக்காந்துட்டு இருந்திச்சி , அம்மா கிட்ட போயி மடில தலை வச்சி படுத்துகிட்டேன் ,அம்மா என்னோட நெத்தில கை வெச்சி “உனக்கு என்ன ஆச்சி ஏன் இப்படி நடந்துக்கிர”னு கேட்டு மெல்ல தலைய வருடி கொடுத்திச்சி.அம்மா கை மேல பட்டவுடனே எனக்கு அழுகைவந்திடிச்சி “அழாதே குமாரு முத அம்மா கிட்ட பேசு”னு சொல்லவும், அம்மா கைய பிடிச்சி உள்ள கூட்டிட்டு போயிட்டு அம்மா கால் விழுந்தேன், “அம்மா எனக்கு இப்படி வாழ பிடிக்கல அம்மா ,என் மனசு சொல்லுது என்னை பொம்பளைன்னு, அத மறுத்து இப்படி பொய்யான வாழ பிடிக்கல,நான் என்ன செய்யம்மா”னு கதற...என்னை தன்னுள் அணைத்த அம்மா, “அவரு வந்தா என்ன சொல்லுவேன்”னு சொல்லி அழ ,அம்மாவின் பிடியிலிருந்து விலகி மெல்ல அம்மாவை அணைத்த நான் “அம்மா நீ சொல்றதுபோல நான் உன்னைய நல்லா கவனிச்சிக்கிறேன்,இன்னும் படிக்கிறேன் ,ஆனா இந்த எண்ணத்தை மட்டும் என்னால மாத்திக்க முடியல”னு சொல்லவும்,அம்மா என்னையவே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணில் நீரோடு,அம்மாவை பார்த்துக்கொண்டே உறங்கிபோனேன் நான்.
திடிரென்று சத்தம், கேட்டு விழிக்க ,அம்மாவை போட்டு அப்பா அடித்து கொண்டிருந்தார், “உன்னாலதான் இப்படி ஒத்த பிள்ளைய வளர்க்க நாதியில்லாத நாயி நீ செத்து தொலையேன்”னு அப்பா சொன்னது என் காதில் கேட்க, ஒருமுடிவுடன் இருக்கக் கண்ணை மூடிக் கொண்டேன்.
“மேடம் நீங்க கேட்ட இடம் வந்திடிச்சி னு சொல்லவும் ,கண்ணில் வழியும் நீரை துடைத்துக்கொண்டு விழித்தேன் ,டிரைவரிடம் கொஞ்சம் முன்ன போங்க அப்படியே அந்த கடைசி தெருவுக்கு முன்னால நிறுத்திகோங்க .கார் நிறுத்தவும் சிண்டும்,பெரிசுகளும் என காரை சுற்றி ,இன்னும் அப்படியேதான் இருக்கு ,அதே டீக்கடை ,அதே பள்ளிக்கூடம்,அதே தெரு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது எங்க ஊரு "கல்லுகுட்டை"
எதோ நடிகை போல இருகாங்க ? யாரு யாரு இவங்க னு பேசிக்கிற சத்தம் மட்டும் கேட்க, மாற்றத்துடன் நான் 15 வருடம் கழித்து அம்மாவை சந்திக்க "குமாரியாய் " ,குமரியாய் நடந்து கொண்டிருக்க ,என்னோட படித்த கணேசு என்னை பார்த்தபடி பால் எடுத்துகொண்டு போனான்.இன்னும் அப்படியே அவன் குடும்ப தொழிலை மறக்காமல் .
வாசலில் அம்மா! கயித்து கட்டிலில் அப்பா! வயோதிகம் அவரை அதிகம் தின்றுகொண்டிருந்தது. அம்மா என் கண்ணுக்கு அப்படியே இருந்தாள். “இங்க குமாரோட அம்மா நீங்கதானே”னு சொல்லிக் கேட்கவும் , “நீங்க யாரு?... எதுக்கு கேக்கறீங்க?” னு கேட்டபடி பக்கத்தில வந்த அம்மா "குமாரு!... வா!..” என்று சத்தமில்லாமல் என்னைக் கூப்பிட்டு, “ஏங்க இங்க வந்து யாரு வந்திருக்கான்னு பாருங்க”னு அப்பாவிடம் சொல்லிவிட்டு உள்ளே போனாள் அம்மா. கண்ணைச் சுருக்கிவைத்து என்னைக் கிட்டத்தில வந்து பார்த்த அப்பா “குமாரு…வந்திட்டியா!” என சொல்லிக் கட்டிக்கொண்டார். பட்டவேதனைகளும் வலிகளும் மறந்தது அப்பாவின் இறுக்கத்தில்……..!

Wednesday, December 5, 2012

காதலிக்கப்பட்டவன்



காதலிக்கப்பட்டவன்


காதலிக்கப்பட்டவன்

இதயத்தில் நான் மட்டுமே ...

எதோ புரிதலில் என்று

நினைக்கும்முன்,

உன் உயிர் என்றாய்..

ஏதும் சொல்ல நினைக்கும்

முன், என் வார்த்தைகளை,

உன் நினைவினாலே

நிறுத்தினாய், உண்மை..

இது என்று...விழிகளில்

பேசிய நேரம் போக,

கைபேசியும் போதவில்லை

என் வாழ்வு முழுதும்

போதாது உன்னுடன் பேச,

என்று சொன்ன நீ, பேசாமல்

உன் வாழ்வினில் இருகின்றாய் ..

உன்னுடனான என் புரிதல்,

எனக்கு புரியும் முன்

என்னுடனான உன் வாழ்வு

இன்று உன் வாழ்வாகி போனது .

விலக்கப்பட்டதால்

விலகித்தான்

போனேன் ....

விளங்காமல் தான்

நிற்கிறேன்

உன் நினைவுகளால்

நிரம்பிய என் வாழ்வில் ...

Thursday, November 1, 2012

நிசப்தத்தின் ஓசை




நிசப்தமான இரவு நேரம் ,நாய் ஒன்று தூரத்தில் ஊளையிட்டு கொண்டிருக்கும் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு விழித்தேன்,மெல்ல எழுந்து வாக்கிங் ஸ்டிக்கோடு ஹாலுக்கு வந்தேன் ,அந்த சத்தம் குறைவதாக இல்லை,ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து பருகினேன் ,அங்கிருக்கும் கடிகாரம் 1மணியை காட்டியது, மெல்ல படுக்கையறைக்கு வந்தேன் ,அந்த சத்தம் குறைய மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

இருள்மூடிய காலைவேளை, பனியின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. எழுந்திருக்க மனமில்லாமல் கட்டிலில் புரண்டு படுத்தேன், தூக்கம் என்னை மீண்டும் தழுவிக்கொண்டது. நேரம் ஓடியது. “நித்தீ! கார்த்தீ!” என்று குரல்கொடுத்தபடி நடைபயிற்சிக்குக் கிளம்பினேன். “கிளம்பிட்டீங்களா..?” என்று குரல் கொடுக்க, வந்தார்கள் என்னிரு செல்வங்களும்!

நான் எப்போதும் அணியும் அதே வெள்ளைநிற சட்டை, அவர்களும் அதே நிறத்தில்! எனக்கும் முன்னதாய் இருவரும் சின்ன துள்ளலுடன் ஓட்டத்தை துவங்கினர். இராணுவம் தந்த, கண்டிப்பு ஆனால் மிடுக்கான, வழக்கமான, வேகநடையில் நான் நடக்க, எதிரில் வந்த பக்கத்து வீட்டுக்காரர் சின்னப் புன்னகையுடன் “வணக்கம் சார்!” எனக்கூறி கடந்து போனார், நான் நடையை மிதமாக்கி என் செல்லங்களைப் பார்க்க warm-up செய்து கொண்டிருந்தார்கள்.

‘டிங்…டாங்கென்று’ காலிங்பெல் அடிக்க, சட்டெனத் திரும்பி பொத்தென விழுந்தேன் படுக்கையிலிருந்து! ‘அப்பப்பா…எப்போதும் அதே கனவு, பிள்ளைகளின் நினைவாகவே!’. சிரித்துக்கொண்டே எழுந்தேன் வாக்கிங் ஸ்டிக்கோடு. மெதுவாகப்போய்க் கதவைத் திறக்க, வேலைக்காரப் பெண் மல்லிகா நின்றிருந்தாள்.

நகர்ந்து நான் வழிவிட, ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று பரபரவெனத் தன் வேலையைத் தொடங்கினாள்.வளவளாவென்று பேசி அரைகுறை வேலை செய்பவர்களைப் போலல்ல அவள், ஒன்றுவிடாமல் எல்லா வேலைகளையும் பேசாமல் செய்து முடிக்கும் விதம்! அவளுக்கு என்னைக் கண்டால் பயம் என்பதைவிட, என் கண்டிப்பைக் கண்டு பயம், என் வீட்டார் போலவே.

என் காலைக் கடைமையில் ஒன்றான நடைபயிற்சி செய்யத் துவங்கினேன். நான் முன்னோக்கி நடந்தாலும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. செல்லம்மாவுடன் இணைந்திருந்த அந்த நாட்கள், என் கண்டிப்பில் அவளும், பிள்ளைகளும் வாழ்ந்தது, அவர்களோடு நான் கடந்த நாட்கள் என அனைத்தையும் பெருமையுடன் அசைபோட்டது மனம்.

நித்தியா அமெரிக்காவிலும், கார்த்தி கனடாவிலும் செட்டில் ஆகி விட்டனர். நான் மட்டும் அவளின்றி இங்கு அவளுடைய பிரம்மாண்ட எண்ணங்களால் உருவான வீட்டில் தனித்து! ‘அம்மா மட்டும் இருந்திருந்தால்’ என்ற வார்த்தைகளை மல்லிகா அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள். என்னைக் கண்டதும் அமைதியாவாள். .

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். கொஞ்சம் அதிகமாக நடந்துவிட்டேனா என யோசித்துக் கொண்டே நிமிர, மல்லிகா வெளியே கிளம்ப ரெடியாக நின்று கொண்டிருந்தாள். “ஐயா, வேலைய முடிச்சுட்டேன் சமையல் செய்து, சாப்பாட்டு டேபிளில் வச்சுருக்கேன், அப்றம்.. நீங்க நாளை வர சொல்லியதாக டாக்டரிடம் சொல்லிட்டேன் பால் பாக்கட்டை ஃபிரிட்ஜில் வைக்கனும் அதான் பாக்கி” எனக்கூறி எடுக்க வெளிவாசலுக்கு போனாள். மனதை என்னமோ செய்தது, உடல் வியர்த்தது படபடப்பும் கூடியது.
காற்றோட்டத்தில் போய் கொஞ்சம் நின்றால் இதமாயிருக்கும் என்று மெல்ல வெளியே வந்து தோட்டத்தில் இருந்த அந்த அழகான ஜெர்மன் கிரில் பெஞ்சில் அமர்ந்தேன்.

அவளுக்குப் பிடித்த அந்த தோட்டத்தில் அவளுக்குப் பிடித்த அந்த பெஞ்சில் அமரும்போது அவளுடன் இருப்பதாகவே ஒரு நினைவு எனக்கு.

''பெண்மையின்றி… மண்ணில்…. இன்பம் ஏதடா
கண்ணைமூடி…. கனவில்… வாழும் மானிடா "


என்ற பாடல் சில்லென குளிர் காற்றாய் இதமாக வருட, என்னையே நான் பார்த்துக்கொண்டேன், இவ்வளவு வயதாகி விட்டதா எனக்கு! என்னையே கேட்டுக் கொண்டேன்.

இப்படிக் கேட்கும்போதெல்லாம், செல்லம்மா, “நீங்கள் எப்போதும் இளமைதான்” என்பாள். புது தெம்புடன் எழுந்தபோது..பால் பாக்கெட்டை கையில் எடுத்துகொண்டு உள்ளேவந்த மல்லிகா உடனே வெளியே ஓடினாள்.

‘என்ன ஆச்சு அவளுக்கு’ என்று ஆச்சர்யப்பட்ட என் கண்ணில் , வாடியிருந்த ரோஜாச்செடி பட்டது ‘இப்படி வாடியிருக்கிறதே , நேற்று தானே தண்ணீர் விட்டேன்’ எனக்குள் பேசிக் கொண்டே, செடி முழுக்க குளிரும்படி தண்ணீர்ப் பாய்ச்சினேன் .

மல்லிகா வீட்டினுள் போவதும் வெளியே வருவதுமாய் இருந்தாள். ஏன் யார்யாரோ வருகிறார்கள்.. யாரவர்கள்? இந்தக் காலை வேளையில் என்னைத்தேடி, எதற்கு? போய்க்கேட்போம்.. என்று வீட்டினுள் போக, ஓ, பக்கத்து வீட்டுக்காரர்! என்னைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் மட்டும் சொல்லும் வேறெதும் பேசசாத அவர் ஆச்சர்யமாய் இன்று என்னைத்தேடி வீட்டுக்கே வந்திருக்கார்? யோசித்துக்கொண்டே, “வணக்கம் , உக்காருங்கள் இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்.

ஆனால் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை, எதோ கஷ்டத்தில் வந்திருக்கிறார் போல என்று நினைத்து கொண்டே ஹாலுக்கு மீண்டும்வர, அவர் என்னுடைய தொலைபேசியை அனுமதியின்றி எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது எனக்குக் கோபமூட்டியது. ஓ! இதென்ன..உள்ளே இரண்டு போலீஸ்காரர்கள்? அவர்களை இவர் ஏன் வெளியே அழைத்து போய் பேசுகிறார்?
வெளியில்போய் அவர்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்டது. "சார் இந்தவீட்டில் வேலை செய்யும் மல்லிகாதான் முதலில் பார்த்தாங்க, அவங்க வரும் போது மில்ட்ரிக்காரர் நெஞ்சில் கை வைத்தபடி விழுந்துகிடந்திருக்கிறார்..பார்த்துட்டு பயந்துபோய் என்னை வந்து கூப்பிட்டதும் , நான் வந்து பார்த்தேன் நான் பாக்கும்போது மூச்சு இல்லை, அவருக்கு இங்கு யாருமில்லை..பிள்ளைங்க வெளிநாட்ல இருக்காங்க அதான் உடனே உங்களுக்கு தகவல் கொடுத்தேன்’ எனக் கூற..‘ஹெலோ நான் தான் இங்கு இருக்கிறேனே’ எனக் கூறியதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

என்ன நடக்குதிங்கேன்னு என் அறைக்கு போய் பார்க்க, அய்யோ அங்கு கிடப்பது யார் நானா? .அப்போ இங்கிருக்கும் நான் ? எப்படி? அப்போ நான் இறந்து விட்டேனா? அய்யோ நான் பார்ப்பது என் உடலையா..? அய்யோ.. என் செல்வங்களா.. உங்களைத் தவிக்கவிட்டு இறந்தேனா” என்றெண்ணியபோது ..

“அவர் யாரிடமும் பேசமாட்டார் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, அவரோட பிள்ளைகள் நம்பரும் தெரியாதே!” என்ன்றவர் சொல்ல.. மல்லிகா என் டைரியை நீட்டினாள். அதிலிருந்து நம்பர் எடுத்து டயல் செய்தார் கார்த்திக்கிற்கு.. கிடைக்கவில்லை… நித்திக்குப் பேசினார் “ஹலோ. நான் சென்னையிலிருந்து உங்க பக்கத்து வீட்டுக்காரர் பேசரேங்க.. ஸாரி சார்..இங்க உங்கப்பா தவறிட்டார்..” என்று நடந்ததை கூறிக்கொண்டிருந்தவரின் முகம் அதிர்ச்சியில் மாற ...

“என்னப்பா.. என்ன சொல்றாங்க அவங்க, என்ற போலீஸ்காரரிடம் “சார் அவங்க மகள் ‘அப்படியா போய்ட்டாரா.. காலத்துக்கும் ரூல்ஸ்பேசியே எங்களை ஏதையுமே அனுபவிக்கவிடலை இப்போ இங்கேயுமா? எங்களால இப்ப அங்க வரமுடியாதுங்க இதமாதிரி செத்துட்டவங்களுக்கு கார்பரெஷன் ரூல்ஸ் படி என்ன செய்னுமோ அதை செஞ்சுட்டு எவ்ளோன்னு மெசேஜ் குடுங்க உங்களுக்கு அனுப்பிடரோம்’ ன்னு சொல்லிப் போனை வெச்சிட்டாங்க சார்!”

“ஐய்யோ என் செல்வமா..என் பிள்ளையா இப்படி” என நான் கண்ணீர் விட்டுக் கதறிக்கதறி அழ, வந்துட்டீங்களா” என்றபடி வழிந்தோடிய கண்ணீரைத் தன் கரங்களால் துடைத்தாள் செல்லம்மாள்!